நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (செப்டம்பர் 12) அறிமுகம் செய்து வைத்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாகப் பிரிந்ததையடுத்து, ஜெயா டிவியும் டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழும் டிடிவி தினகரன் தரப்புக்குச் சென்றது.
இதையடுத்து முதல்வர், துணை முதல்வர் தரப்பில் நமது அம்மா என்ற புதிய நாளிதழ் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழாக அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக கட்சிக்கென தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றன. புதிதாகத் தொடங்கப்படும் தொலைக்காட்சிக்கு நியூஸ் ஜெ என்று பெயரிடப்பட்ட நிலையில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக ‘நியூஸ் ஜெ’ என்ற ஆப் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி லோகோ ஆகியவை நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டு லோகோவை அறிமுகப்படுத்தினர்.
இதையடுத்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவின் திட்டங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும் பாலமாக இந்தத் தொலைக்காட்சி அமையும் என்று கருதுகிறோம், ஜெயலலிதா இருக்கும்போது ஒரு தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. அது யாரிடம் செல்லக்கூடாது என்று நினைத்தோமோ அவர்களிடமே சென்றுவிட்டது. அதற்கு மாற்றாகத்தான் நியூஸ் ஜெ தொடங்கப்பட்டுள்ளது
நம்முடைய இயக்கத்திற்கு ஒரு தொலைக்காட்சி இல்லை என்ற குறையை நியூஸ் ஜெ போக்கியிருக்கிறது. அதிமுகவின் பொதுக்கூட்டங்கள் எல்லாம் நியூஸ் ஜெ வாயிலாக வெளிவர இருக்கிறது.
பல்வேறு தொலைக்காட்சிகள் தமிழகத்தில் இருந்தாலும், அவர்கள் எல்லாம் அரசின் திட்டங்களை ஒருமுறைதான் காண்பிக்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சியினர் ஒரு குறை சொன்னால் அதை நாள் முழுவதும் காண்பித்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பார்கள். ஆளும்கட்சியில் இருந்து எப்படி விறுவிறுப்பான செய்திகளை சொல்ல முடியும். மக்களுக்கு நன்மை தரும் செய்திகளை மட்டும்தான் கூற முடியும். அந்தக் குறையைத் தீர்ப்பதற்கு நியூஸ் ஜெ தொடங்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை, மருத்துவத் துறை, உள்ளாட்சித் துறை, உயர்கல்வித் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை எனப் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து பரிசுகளைப் பெற்றிருக்கிறோம். அதுபோல காவிரி நதிநீர் பிரச்சினையையும் அதிமுக அரசுதான் தீர்த்து வைத்துள்ளது.
இவ்வாறு அரசின் மூலம் எடுக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் குறுகிய அளவில்தான் ஒளி பரப்புகின்றனர். ஆனால், கட்சிக்கென்று ஒரு தொலைக்காட்சி இருந்தால் நலத் திட்டங்களை அடிக்கடி ஒளிபரப்ப முடியும். அதன்மூலம் அதிமுக அரசு சிறந்த அரசு என்ற பெயர் கிடைக்கும். இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது என்பதை மற்ற தொலைக்காட்சிகளும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.
துணை முதல்வர் பன்னீர் செல்வம், “ஒருசார்பு செய்தியைப் பார்த்து மக்கள் புளித்து போயுள்ளனர். பரபரப்புக்காகத் தகவல்களை திரித்து ஒரு சார்பாக செய்திகளைத் தரும் நிலையை மாற்றி, நடுநிலை மாறாமல், உள்ளது உள்ளபடி மக்கள் மத்தியில் செய்திகளை எடுத்துச் செல்லும் நிறைவான ஊடகமாக மக்கள் மனதில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி இடம் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.�,