pசென்னையில் சர்வதேச ஏற்றுமதிக் கண்காட்சி!

Published On:

| By Balaji

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 330 பில்லியன் டாலர் மதிப்பைத் தாண்டும் என்று சென்னையில் நடந்த சர்வதேச பொறியியல் சாதனங்கள் கண்காட்சியில் மத்திய வர்த்தகத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் கனரக தொழில் துறை சார்பாக, சர்வதேச பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதிக் கண்காட்சி சென்னையில் மார்ச் 14ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் தொடர்ந்து 3ஆவது முறையாக நடத்தப்படும் இந்த கண்காட்சி 16ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இக்கண்காட்சியைத் தொடங்கிவைத்த மத்திய வர்த்தகத் துறை செயலாளரான அனுப் வதவான் பேசுகையில், ”நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு இதுவரை இல்லாத வகையில், 330 பில்லியன் டாலர் மதிப்பைத் தாண்டும். இந்த ஏற்றுமதியில் பொறியியல் துறை பெரும் பங்கு வகிக்கும்” என்றார்.

இந்த கண்காட்சியின் தொடக்க விழாவில் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியின் தொழில் பங்குதாரராக உள்ள மலேசிய நாட்டின் சர்வதேச வர்த்தக அமைச்சகத்தின் முதன்மை துணைச் செயலாளர் தத்தோ கே.திலகவதி பங்கேற்றார். அவர் பேசுகையில், “2017-18ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 5.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல, மலேசியாவிலிருந்து 9 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இனி வரும் ஆண்டுகளில் இந்தியா – மலேசியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் மேலும் அதிகரிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share