நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியா எல்லையில்லாத வளர்ச்சியடையும் என்று கூறித்தான் மோடி மத்தியில் ஆட்சியமைத்தார். ஆனால் நிலைமையோ தலைகீழாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு, மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்று கூறியது மத்தியில் ஆளும் பாஜக. ஆனால், கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு அறிக்கையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாகச் சரிந்துள்ளது.
இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியை நோக்கிச் செல்வது குறித்துக் கடந்த மே மாதமே பிரதமரை எச்சரித்திருக்கிறார். சுப்பிரமணியசாமி மே மாதம் 9ஆம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். பொருளாதார ஆய்வு அறிக்கை வருவதற்கு 2 மாதத்துக்கு முன்பே இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியன் சுவாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் சாரம் இதுதான்:
இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவை நோக்கிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, அதைச் சரிக்கட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதமர் அலுவலகத்தில் பிரச்சினைகள் மேலாண்மைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இதன் மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுத்த வேண்டும். 2019இல் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இதுபோன்ற சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது நல்லது. இன்றைய பொருளாதார நிலை பல்வேறு தவறான அறிகுறிகளைக் காட்டும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதில் உடனடியாக கவனம் செலுத்துங்கள். பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகச் செல்வது பின்னர் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இழுத்துச் சென்றுவிடும். எனவே, இந்த விஷயத்தைச் சிறப்பாகக் கையாள உரிய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்ததையும் இங்கு நினைவுகூரலாம். பொருளாதார மேதையும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கும் பொருளாதார நடவடிக்கைகளை விமர்சித்தார். “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பால் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் உள்ள குறைபாடுகளாலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. அதைச் சரி செய்ய வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை எதிர்மறையாகச் சென்றுகொண்டிருக்கிறது. எனவே, எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்” என்று எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.�,