சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கில், தொழிலதிபர் கிரண் உட்பட 10 பேரின் முன் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது தஞ்சாவூர் நீதிமன்றம்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் வீடு, பங்களா உள்ளிட்ட இடங்களில் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் ஆய்வு நடத்தினர். அப்போது, அவரது பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 224 பழங்கால சிலைகள் உட்பட கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதைதொடர்ந்து, ரன்வீர் ஷாவின் நண்பரான பெண் தொழிலதிபர் கிரணுக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையிலும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி சோதனை நடத்தினர். மாளிகையின் வளாகத்தில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 கலைப்பொருட்களைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் மொத்தம் 247 பழங்கால கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கிண்டியில் உள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதைதொடர்ந்து, இரண்டு பேருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இருவருக்கும் இன்னும் ஜாமீன் கிடைக்காத நிலையில், கிரண் உட்பட 10 பேர் முன் ஜாமீன் கோரி தஞ்சை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நேற்று (நவம்பர் 19) தஞ்சாவூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் கிரண் உள்பட 10 பேரின் முன் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.�,