�
சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிறுவனத்தை இயக்கவும், மேம்படுத்தவும் முடியாமல் தடுமாறுகின்றன. இதனால் அவற்றின் சுமையைக் குறைக்க எளிதில் கடன் கிடைக்கச் செய்யும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். நவம்பர் 2ஆம் தேதி இதுகுறித்து மோடி பேசுகையில், “நீங்கள் உங்கள் அலுவலகத்துக்கு செல்லும் நேரத்திற்குள் இனி கடன் பெறலாம். பைலட் வேகத்தில் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள 72,000 சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்தக் கடனுதவிகள் கிடைக்கும்” என்றார்.
இந்தக் கடன் திட்டத்தின்படி ஜிஎஸ்டியில் பதிவு செய்த சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளது. ஜிஎஸ்டியில் முறையாக ரிட்டன் தாக்கல் செய்தால் இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வட்டி விகிதத்திலிருந்து 2 விழுக்காடு தள்ளுபடியும் இந்தக் கடனுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையையும் தானாக உயர்த்தும் என்று மோடி கூறியுள்ளார். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதிக்கு முன்பும், பின்பும் 3 விழுக்காடு முதல் 5 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெறத் தகுதியானவர்களுக்கு அதிகபட்சமாக 59 நிமிடங்களில் கடன் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.�,