சபரிமலை விவகாரத்தைச் சரியாக கையாளாததற்காக கேரள இடதுசாரி அரசையும், எதிர்க்கட்சியான காங்கிரஸையும் பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.
பல காலமாகவே பெண்களுக்கு சபரிமலைக் கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை நீக்கி அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக் கோயிலுக்குள் அனுமதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண்களின் அனுமதிக்கு எதிராக போராடும் பக்தர்கள் மற்றும் இந்துத்துவ சக்திகள் மீது கேரள அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டை இந்துத்துவ அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
கேரளத்தில் தனது கால்தடத்தைப் பதிக்க விரும்பும் பாஜக அரசும் கேரள அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து வருகிறது. நேற்று (ஜனவரி 15) கேரளாவின் கொல்லத்தில் இரண்டு திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “சபரிமலை விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் நடவடிக்கைகள் வரலாற்றிலேயே எந்தவோர் அரசும் செய்யாத அளவுக்கு வெட்கக்கேடானதாக இருக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு ஆன்மிகத்தையும், மதத்தையும் எப்போதுமே மதித்ததில்லை என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்த அளவுக்கு வெட்கக்கேடானதாக மாறும் என்று எவரும் எதிர்பார்த்ததில்லை.
எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் எந்தவிதத்திலும் சிறந்ததல்ல. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் பல நிலைப்பாடுகளை எடுத்துள்ளது. காங்கிரஸ் தனது உண்மையான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும்படி நான் சவால் விடுகிறேன்” என்று கூறினார்.
சபரிமலையில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பாரம்பரிய தடைக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களுக்கும் பிரதமர் மோடி வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளார். எனினும், காங்கிரஸ் தனது நிலைப்பாடு பற்றி இன்னும் தெளிவுபடுத்தவில்லை.�,