குழந்தை அன்விகா கடத்தப்பட்டு, விரைவில் மீட்கப்பட்டது எப்படி என்று கூடுதல் ஆணையர் தினகரன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை செனாய் நகரை சேர்ந்த மென்பொறியாளர் அருள்ராஜ், மருத்துவர் நந்தினி தம்பதியினரின் மூன்றரை வயது மகள் அன்விகா. நேற்று முன் தினம் மதியம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அன்விகாவையும், வீட்டில் பணிபுரிந்த மணப்பாறையைச் சேர்ந்த அம்பிகாவையும் காணவில்லை என்று அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் குழந்தை, வீட்டில் வேலை செய்து வந்த பணி பெண்ணாலேயே கடத்தப்பட்ட அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. ரூபாய் 60 லட்சம் கேட்டு மிரட்டி அம்பிகாவும் அவரது காதலருமான முகமது கலிமுல்லாவும் குழந்தையை கடத்தியுள்ளனர். குறிப்பாக யூடியூபில் குழந்தை கடத்தல் தொடர்பான வீடியோக்களை பார்த்து இச்சம்பவத்தை கலிமுல்லா காதலியுடன் இணைந்து நடத்தியுள்ளார். குழந்தையை பீச்சுக்கு அழைத்து செல்வதாக கூறி கடத்தி சென்றுள்ளனர்.
சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடத்தப்பட்ட இந்த கடத்தல் சம்பவம் எப்படி நடந்தது, எட்டு மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது எப்படி என்று விசாரணை அதிகாரியான சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் தினகரன் விளக்கம் அளித்துள்ளார். நேற்று (ஜூலை 19) மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கலிமுல்லா ஏற்கெனவே படமொன்றில் நடித்துள்ளார். அந்த படத்தின் மூலம் அவருக்கு போதுமான வருமானம் இல்லை. அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்த கடத்தல் சம்பவம் மூலம் வரும் பணத்தை வைத்து தனியாக படம் எடுக்கலாம் என்ற அடிப்படையில் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். கலிமுல்லாவுக்கு கடத்தல் தொழிலில் பெரிதும் அனுபவம் இல்லை என்பதால் யூடியூபில் கடத்தல் தொடர்பான வீடியோக்களை பார்த்துள்ளார். கடத்தல்காரர்கள் எப்படி பேசுவார்கள் எவ்வளவு பணம் கேட்பார்கள் என்பது குறித்தெல்லாம் யூடியூபில் பார்த்து அதன் மூலம் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். செங்குன்றத்தில் வைத்து கலிமுல்லாவை கைது செய்த பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அம்பிகா, கோவளம் பீச் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் குழந்தையை வைத்திருந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து நீலாங்கரை ஏசிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு சென்ற தனிப்படையினர் குழந்தையை மீட்டனர். குழந்தை கடத்தப்பட்டதாக எங்களுக்கு வந்த புகாரைத் தொடர்ந்து எட்டு மணி நேரத்தில் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,” வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்று ஒரு செயலி மூலம் இந்த தம்பதியினர் விளம்பரம் கொடுக்கின்றனர். அதில் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் நம்பரையும் கொடுக்கின்றனர். அதன்மூலம் அம்பிகா தொடர்பு கொண்டு பேசியதும், அவரை பற்றி எந்த விவரமும் தெரியாமல் வேலைக்கு எடுத்துள்ளனர். இதனால் தான் இதுபோன்ற ஆபத்தான சம்பவங்கள் நடைபெறுகிறது. பொதுமக்கள் வீட்டில் வேலையாட்களை பணியமர்த்தும் போது அவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்த பிறகு வேலையில் சேர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
”தமிழக காவல்துறையில் சிசிடிஎன்எஸ் என்று இ சேவை ஒன்றை தொடங்கியுள்ளோம். ரூபாய் 1000 செலுத்தினால் இந்த சேவை மூலம் தனிப்பட்ட நபர் குறித்து ஆராய்ந்து காவல்துறையினரே தகவல் தெரிவிப்பர்” என்றார்.
தனியார் செயலிகள் மூலம் வேலைக்கு ஆட்களை எடுத்தால் இது போன்ற ஆபத்துகள் நேரிடும் என்று கூறிய அவர், ”காவல் ஆணையர் விஸ்வநாதன் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி குழந்தையை பத்திரமாக மீட்ட பின்னரே அண்ணா நகர் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அவரது வழிகாட்டுதலின் பேரில் இந்த தேடுதல் வேட்டை நடந்தது. சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் எங்களுக்கு புகார் வந்தது. இரவு 10மணியளவில் குழந்தை மீட்கப்பட்டது இருவரது நம்பரை ட்ரேஸ் செய்தும், சிசிடிவியில் பதிவான சிவப்பு நிற காரின் நம்பரை வைத்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது” என்று குறிப்பிட்டார்.
.குழந்தையை தூக்கிச் சென்ற அம்பிகாவுக்கு அவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதே அவரது தாய் மாமாவுடன் திருமணம் செய்து வைக்கப் பட்டிருக்கிறது. சிறிது காலத்தில் இருவரும் பிரிந்ததால் சென்னைக்கு வந்து பாடிப்புதூரில் வசித்து வந்துள்ளார். பின்னர் புழல் கேஎஃப்சியில் பணிபுரிந்த கலிமுல்லாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”