pகுஜராத் கலவரம்: மோடிக்கு எதிரான மனு ஏற்பு!

Published On:

| By Balaji

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் மோடி விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை ஏற்றுக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், நவம்பர் 19ஆம் தேதி விசாரணையைத் தொடங்கவுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டது. இதில், பல நூறு பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் நிகழ்ந்த மோசமான கலவரங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்தக் கலவரத்தின் பின்னணியில் குஜராத்தின் அப்போதைய முதல்வரும் தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடி இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. மோடி மற்றும் பலருக்கு இந்தக் கலவரத்தில் தொடர்பு இல்லை என அக்குழு அறிவித்தது.

எஸ்ஐடி அளித்த அறிக்கை பொய் என குஜராத் கலவரத்தை அடக்க அனுப்பப்பட்ட ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தி சர்காரி முசல்மான் என்ற தனது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், “2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்த 3,000 ராணுவத்தினருக்குத் தலைமை ஏற்றுச் சென்றேன். அகமதாபாத் விமான நிலையத்தில் மார்ச் 1ஆம் தேதி காலை 7 மணிக்குத் தரையிறங்கிவிட்டோம்.

ஆனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பற்றி எரிந்துவரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த எங்களுக்கு எந்தவிதமான வாகன வசதியும் மாநில அரசு சார்பில் செய்து கொடுக்கப்படவில்லை. ஏறக்குறைய ஒருநாள் முழுவதும் அங்கு காத்திருந்த பின்புதான் எங்களுக்குப் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. அதற்குள் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கலவரம் காட்டுத்தீ போல் பரவிவிட்டது.

மார்ச் 1ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு நான் அப்போது இருந்த முதல்வர் மோடியிடம் போக்குவரத்து வசதி செய்து கொடுங்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலையில் தெரிவித்தும் எங்களுக்குத் தாமதமாகவே கலவரம் நடந்த பகுதிகளுக்குச் செல்ல போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் கலவரத்தில் மோடிக்கு நற்சான்று அளித்தது. கூடுதல் உள்துறை தலைமைச் செயலாளர் அசோக் நாராயண் அறிக்கையின் அடிப்படையில் ராணுவம் குவிக்கப்பட்டதில் எந்தவிதமான தாமதமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

எஸ்ஐடி அறிக்கையில் என்னைப் பற்றி குறிப்பிடும்வரை, அது குறித்து எனக்கு ஏதும் தெரியாது. சில நாட்களுக்கு முன்புதான் எனக்குத் தெரியும். எஸ்ஐடி அறிக்கை குறித்து மீண்டும் சொல்கிறேன், அது அப்பட்டமான பொய். நான் உண்மையைச் சொல்கிறேன்” என்று அவர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

கலவரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாஃப்ரியும் பலியாகியிருந்தார். அவரது மனைவி ஜாக்கியா ஜாஃப்ரி, மோடி உள்ளிட்ட ஏனையோர் குற்றமற்றவர்கள் எனக் கூறி குஜராத் கலவர வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். மூன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவரது மனுவைத் தள்ளுபடி செய்வதாக 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அதேநேரத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று அனுமதி வழங்கியது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று (நவம்பர் 13) ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மனு தொடர்பாக நவம்பர் 19ஆம் தேதி விசாரணையைத் தொடங்கவுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel