தேவிபாரதி
பத்து நாள்களுக்கு முன்னால் அமெரிக்க உளவுத் துறை இந்தியாவில் மிகப் பெரிய மதக் கலவரங்கள் நடக்கக்கூடும் என எச்சரித்திருந்ததை விளையாட்டாக எடுத்துக்கொள்ள யாராவது விரும்பியிருந்தால் அவர்களுக்கு இப்போது உண்மையாகவே முதுகுத் தண்டு சிலிர்த்துப் போயிருக்கும். தேர்தலுக்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது என்னும் அமைப்பின் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் தற்போதைய கணக்குப்படி 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்ததையும் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும்விட மோசமானது ஏதாவது நடக்கக்கூடும் என்னும் அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் மீது நடத்தப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என அறிவித்திருக்கும் பிரதமர், பழி தீர்ப்பதற்கான முழு அதிகாரத்தையும் ராணுவத்துக்கு அளித்திருக்கிறார். சிஆர்பிஎஃப்பின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பழிதீர்க்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டாயிற்று. காஷ்மீரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் இணையச் சேவையை முற்றிலுமாகத் துண்டித்திருக்கும் அரசு, வேறு சில பகுதிகளில் காணொலிகளையும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்வதைத் தடுக்கும் நோக்கில் இணைய இணைப்பின் வேகத்தைக் குறைத்திருக்கிறது.
**போர் முழக்கம்?**
ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு உடனடியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட போதிலும் தாக்குதலுக்கான முழுப் பொறுப்பும் பாகிஸ்தான் அரசு மீது சுமத்தப்படுகிறது. இஸ்லாமாபாத்திலிருந்த பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை உடனடியாக டெல்லி திரும்புமாறு அழைத்துள்ள இந்திய அரசு, பாகிஸ்தானுக்கு அளித்துள்ள சலுகைகளை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. இனியும் வர்த்தக ரீதியில் பாகிஸ்தானை முக்கியத்துவமுள்ள நாடாகக் கருதப்போவதில்லை என அறிவித்திருக்கும் அரசு, நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்விதமான சமரசங்களுக்கும் இடமில்லை என அறிவித்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு டெல்லியில் அரசு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பிரதமர், பாகிஸ்தானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். நாட்டு மக்களை ஓரணியில் திரளுமாறும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பங்கேற்குமாறும் மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் மோடி. பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் பாகிஸ்தானைப் பழிதீர்ப்பதற்குச் சபதமேற்றிருக்கிறார்கள். அரசு, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கத் தயாராகிவருவதாகச் செய்திகள் பரப்பப்படுகின்றன.
தாக்குதல் பற்றிய முதல்கட்டத் தகவல்கள் வந்த உடனேயே பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் எனப் பலரும் முழக்கமிடத் தொடங்கியிருக்கிறார்கள். நேரடி அரசியல் தொடர்பு இல்லாத கௌதம் காம்பீர் போன்ற இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் தமது ட்விட்டர் பக்கங்களில் பாகிஸ்தானுக்கு எதிரான மூர்க்கமான கருத்துகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான வரலாற்று ரீதியான கணக்குகளைத் தீர்த்துக்கொள்ள தற்போதைய இந்தியக் கிரிக்கெட் அணி மைதானத்துக்கு வெளியே ஏதாவது செய்ய நினைக்கிறது போலும்.
**பாகிஸ்தானுக்கும் நெருக்கடி**
பயங்கரவாதத்தாலும் அரசியல் ஸ்திரமின்மையாலும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளாலும் திணறிக்கொண்டிருக்கும் பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்துவதற்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முற்பட்டிருக்கிறது மோடி அரசு. சென்ற ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியதிகாரத்தைப் பெற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு இப்போது திகைத்துப்போயிருக்கிறது.
தனது அரசுக்கும் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மறுத்திருக்கும் இம்ரான் கானை யாரும் பொருட்படுத்தவில்லை. ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கும் அவரது அரசுக்கும் இடையோன தொடர்புகள் குறித்தோ இந்திய அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் இதுபோன்ற தாக்குதலை நடத்தியதற்கான அரசியல் நோக்கங்களைக் குறித்தோ பரிசீலிப்பதற்கு இப்போது யாருக்கும் அவகாசமில்லை.
இந்தியாவின் ராணுவ வலிமையைச் சோதித்துப் பார்ப்பதற்கு பாகிஸ்தானும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளும் தொடர்ந்து இடமளித்து வருகின்றன. இதுபோன்ற முட்டாள்தனமான தாக்குதல்களில் ஈடுபடுகின்றன. சீண்டுகின்றன. தோல்வியடைகின்றன. தொடர்ந்து வரும் பாகிஸ்தான் அரசுகள் இந்தியாவை எதிர்கொள்வதற்குப் பயங்கரவாத அமைப்புகளைச் சார்ந்திருப்பதாக நம்ப இடமிருக்கிறது. விளைவாக, அந்நாட்டின் அரசும் ராணுவமும் பயங்கரவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டதுபோல் தெரிகிறது.
பாகிஸ்தானில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இம்ரான் கான், இந்தியாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாகவே சொல்கிறார். காஷ்மீர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதைப் பற்றிய கனவுகளில் மூழ்க விரும்புகிறார். அவரைப் பணியவைப்பதற்கு அல்லது அரசியலிலிருந்து அவரை அப்புறப்படுத்துவதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை மீதான இந்தத் தாக்குதலை ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்த ஜெய்ஷ் இ முகமது எண்ணியிருக்கலாம்.
**மோடிக்குக் கிடைத்திருக்கும் புதிய ஆயுதம்?**
எதிர்க்கட்சிகள், ஜனநாயகவாதிகள் ஆகியோரின் ஒட்டுமொத்த எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டிருக்கும் மோடியைத் தேர்தலை எதிர்கொள்வது பற்றிய பதற்றம் சூழத் தொடங்கியிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் நடவடிக்கை அவருக்குச் சாதகமாக அமையக்கூடும் எனக் கருதப்படுகிறது. இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் களத்தில் மட்டையைச் சுழற்றிக்கொண்டிருக்கும் மோடிக்கு எதிராக கவனமாகப் பந்து வீச வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தானை எதிர்ப்பது இப்போது தேசப்பற்று சம்பந்தப்பட்ட விஷயமாகியிருக்கிறது. அதைக் கேள்விக்குள்ளாக்குவது, விமர்சிப்பது அல்லது கேலி செய்வது ஆடுகளத்தை இழப்பதற்கு வழி வகுத்துவிடும்.
மதசார்பின்மையைத் தம் அரசியல் அடையாளமாக, ஒருவகையில் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக, முன்வைத்து இயங்கிக்கொண்டிருக்கும் கட்சிகள் இப்போது அடக்கிவாசிக்க வேண்டிய நிலை. மோடிக்கு அதுபோன்ற தயக்கம் எதுவும் தேவையில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் தனக்குத் துணை நிற்குமாறு மக்களை – இந்திய வாக்காளர்களை – கேட்டுக்கொண்டிருக்கும் மோடி, இந்திய இஸ்லாமியர்களுடனான கணக்கைத் தீர்த்துக்கொள்வதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். தாக்குதலைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் இஸ்லாமியர்களுக்கெதிரான வெறுப்பைச் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் கட்டமைத்து வருகிறார்கள்.
ஐந்தாண்டு கால ஆட்சியில் மோடி எதைச் செய்து வந்தாரோ அதைத் தொடர்ந்து செய்வதற்கான அங்கீகாரத்தைக் கோர அவரும் சங் பரிவார அமைப்புகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டின் மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகள் பலவற்றை மோடி அரசு தயக்கமில்லாமல் மேற்கொண்டிருக்கிறது. பசு பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சங் பரிவார அமைப்புகள் சிறுபான்மையினர், தலித்துகள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் பண்பாட்டு அடையாளங்களை அழித்தொழிக்கும் நேரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களது வாழ்வுரிமை அச்சுறுத்தலுக்குள்ளாகியது. இந்தியாவின் பன்முக அடையாளத்தை மறுத்து ஒற்றை இந்துத்துவ அடையாளத்தைத் திணிக்க முயன்றுகொண்டிருந்தார்கள்.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ரஃபேல் முறைகேடு சார்ந்த குற்றச்சாட்டுகளைவிட, சங் பரிவார அமைப்புகள் கட்டவிழ்த்துவிட்ட வெறுப்புணர்வும் மோடியின் மௌனமும்தான் அரசுக்கெதிரான வெறுப்பைக் கட்டமைக்கக் காரணமாக இருந்தன.
**எதிர்க்கட்சிகளின் சவால்**
இந்தச் சூழ்நிலையில் நடைபெற்றிருக்கும் இந்தத் தாக்குதலானது அரசியல் ரீதியில் மோடிக்குச் சாதகமானது. அவர் தனது பந்து வீச்சாளர்களைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருக்கிறார். ஜனநாயகத்தை மீட்டெடுப்பது பற்றிய சவால்களுடன் தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராகிக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகள் இப்போது ஆட்டத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான மாற்றுத் திட்டங்களை வகுத்தாக வேண்டும். தேசப்பற்று, இறையாண்மை, பாகிஸ்தான் எதிர்ப்பு, பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்பன போன்ற புதிய சொல்லாடல்களை எதிர்கொள்வதற்கான அரசியல் திட்டம் அது.
இத்தகைய சொல்லாடல்கள் பல தருணங்களில் ஆளும்கட்சிகளுக்குக் கைகொடுத்திருக்கின்றன. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசும் பாகிஸ்தானைத் தனது அரசியல் பகடைக் காயாகப் பயன்படுத்திக்கொள்வதில் வெற்றிபெற்றிருக்கிறது.
பந்து இப்போது மோடியின் கைக்கு வந்துவிட்டது. அவர் ஒரு கையில் மட்டையையும் மற்றொரு கையில் பந்தையும் வைத்துக்கொண்டு ஆடுகளத்தில் நின்றுகொண்டிருக்கிறார். கடந்த ஐந்தாண்டுகளில் காஷ்மீர் நிலவரத்தைச் சீர்படுத்துவதில் தனது அரசு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்னும் உண்மையை மறைக்கக்கூடிய உணர்ச்சி அலையை உருவாக்கவே அவர் விரும்புவார். அந்த அலையின் மீதேறித் தேர்தல் கடலின் கரையைக் கடக்க முடியுமா என்றும் அவர் பார்க்கக்கூடும். திடீரென ஏற்பட்ட இந்தத் திருப்பத்தால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சவால் கணிசமாக அதிகரித்துவிட்டது. இதை எதிர்கொள்ள அவர்கள் மேலும் கடுமையாக உழைத்தாக வேண்டும்.
தேசப் பாதுகாப்பு குறித்த விஷயத்தைத் தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு மனிதர் பிரதமராக இருக்கும் நிலையில் அவர்களுக்கு வேறு வழி இல்லை.�,”