�காற்றாற்றல் மின்சக்தி துறையின் உற்பத்தித் திறன் விரைவில் மேம்படும் என்று இக்ரா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய சோலார் சக்தி கழகம், தேசிய அனல்மின் கழகம் மற்றும் மாநில விநியோக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் மின் உற்பத்தித் திட்டங்களில் 2017 பிப்ரவரி மாதத்துக்கும், 2018 செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் 10 கிகா வாட் உயர்ந்துள்ளது. இதனால் 2019 மற்றும் 2020 ஆகிய நிதியாண்டுகளில் காற்றாற்றல் அடிப்படையிலான மின்சார உற்பத்தி கணிசமாக உயரும் எனத் தெரிகிறது. அண்மையில் நடைபெற்ற காற்றாற்றல் ஏலங்களின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.43இல் இருந்து ரூ.2.77ஆக உயர்ந்துள்ளது. எனினும் விலை இன்னும் ஒரு யூனிட்டுக்கு ரூ.3க்கும் குறைவாகவே இருந்து வருவதாக இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், மற்ற மின்சக்தி ஆற்றல்களுக்கான ஏல விலைகளுடன் ஒப்பிடுகையில் காற்றாற்றலுக்கான விலை இன்னும் போட்டித்தன்மையுடன்தான் இருந்து வருகிறது. அதிக காற்றாற்றல் உற்பத்தியைத் தரக்கூடிய இடங்களைக் கண்டறிவதன் அடிப்படையிலேயே விலை குறைவதும் ஏறுவதும் இருக்கிறது. இக்ரா நிறுவனத்தின் அறிக்கையில், ‘திட்டங்களின் மின் உற்பத்தித் திறன் 2018ஆம் நிதியாண்டில் 1.7 கிகா வாட்டிலிருந்து 2019ஆம் ஆண்டில் 2.5 முதல் 3 கிகா வாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்று விசையாழியின் விலை நிர்ணயம், கூடுதல் செலவுகள், நிதியுதவிச் செலவு உயர்வு ஆகிய காரணங்களால் ஏல விலை உயர்ந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.�,