Pகவனச் சிதறலை ஒழிக்க புதிய ஆப்!

Published On:

| By Balaji

மக்களின் கவனச் சிதறலைக் கட்டுப்படுத்த புதிய செயலி ஒன்றை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஸ்மார்ட் போன், டேப்லட்டுகள், லேப்டாப் என டிஜிட்டல் கருவிகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்ட நிலையில் மக்களின் கவனச் சிதறலும் அதிகரித்துவிட்டது. கவனச் சிதறல் என்பது மக்கள் தினசரி அனுபவிக்கும் பிரச்சினையாக உள்ளது. இதைச் சரிசெய்வதற்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஒரு மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலி மனதை ஒருமுகப்படுத்துவதற்கு உதவுகிறது. ‘டீகோடர்’ என்ற இந்த செயலியைப் பயன்படுத்துவதால் கவனம் மேம்படுவதோடு, மனம் ஒருமுகப்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த செயலி மூளையின் முன்புறத்தைச் செயல்பட வைப்பதாக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியரான பார்பரா சஹாகியன் பேசுகையில், “பணியிலிருந்து வீடு திரும்பும்போது நாள் முழுவதும் பணிச்சுமையில் பரபரப்பாக இருந்ததுபோல உணர்கிறோம். ஆனால் நாம் என்ன செய்தோம் என்பதே நமக்குப் புரிவதில்லை. கடினமான பணிகளைக் கையில் எடுக்கும்போது நாம் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறினார். இந்த செயலியை சோதனை செய்வதற்காக, ஆரோக்கியம் நிறைந்த 75 வயது வந்தவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவினர் டீகோடர் செயலியை பயன்படுத்தினர். இரண்டாம் குழுவினர் பிங்கோ விளையாட்டை விளையாடினர். மூன்றாவது குழுவுக்கு எந்தப் பணியும் கொடுக்கப்படவில்லை. இதில், டீகோடர் செயலியை பயன்படுத்தியவர்கள் நல்ல கவனத்துடனும், ஒருமுக மனதுடனும் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

ஆப்பிள் போன்களில் பயன்படுத்தத் தக்க வகையில் இந்த செயலி வெளியாகியுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்ட் போன்களுக்கான பதிப்பு வெளியாகவுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel