கபாலி படத்தில் காரை வில்லனின் கடைக்குள் ஓட்டி கடையை சேதப்படுத்துவார் ரஜினி. அதே போன்று காரை ஓட்டலுக்குள் விட்டு சேதப்படுத்திய மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரை நீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
மதுரையிலுள்ள எஸ்.எஸ்.காலனியிலுள்ள தனியார் ஓட்டல் அதிபருக்கும் அந்த ஹோட்டலுக்கு அண்மையில் வசித்துவரும் வழக்கறிஞர் ஆர்.கார்மேகம் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்தத் தகராறு முற்றிய நிலையில், 2016 ஏப்ரலில் கார்மேகம் தனது காரை விரைவாக ஓட்டலுக்குள் ஓட்டி வந்தார். இதனால் அப்போது அந்த ஓட்டலுக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினா். ஆனால், கார் ஓட்டலுக்குள் பாதி தூரம் சென்று மேஜைகள், நாற்காலிகள், இனிப்புகள் வைத்திருந்த ஷோகேஸ் ஆகிய அனைத்தையும் உடைத்து நொறுக்கிவிட்டு உடைந்த சாமான்கள் தடுத்ததால் கார் நின்று விட்டது. இதனைத் தொடர்ந்து அந்த ஓட்டல் அதிபர் எம்.ஹரிஹரசுதன் காவல் துறையினரிடம், பார் கவுன்சிலிடமும் புகார் அளித்தார்.
இந்தச் சம்பவம் கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவானதால் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் அப்போது ஒளிபரப்பானது. இந்த புகாரை விசாரித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அவருடைய பின்னணியை விசாரித்தது. அப்போது அவரின் மீது ஏராளமான குற்ற வழக்குகள் இருந்ததும் அதை மறைத்து அவர் வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதற்காகவும்,ஓட்டலின் வாடிக்கையாளர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக காரை ஓட்டலுக்குள் ஓட்டி வந்ததற்காகவும் கார்மேகத்தை வழக்கறிஞர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதாக பார் கவுன்சில் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து பார் கவுன்சில் செயலர் சி.ராஜகுமார், வழக்கறிஞராகப் பதிவு செய்ததற்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும் என்று கார்மேகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒழுங்குமுறை கமிட்டியிடம் தான் நிரபராதி என்றும் ஓட்டல் அதிபர் தான் வில்லன் என்று கார்மேகம் வாதிட்டார். அதற்குப் பதிலளித்த பார் கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி கார்மேகம், கபாலி பட பாணியில் வீர சாகசம் செய்துள்ளார். இதில் அவர் வில்லனாகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டல் வாடிக்கையாளர்களாகவும் இருந்துள்ளனர் என்றும் தெரிவித்தது.�,