கஜா புயலின் தாக்கத்தினால் தென்னை மரங்கள் சேதமடைந்ததால், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த வாரம் நாகை – வேதாரண்யத்தைத் தாக்கிய கஜா புயல், அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைக் கடுமையாகப் பாதித்தது. பெரும்பாலான கடலோர மாவட்டங்களில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன. இதுவரை கஜா புயலினால் 63 பேர் உயிரிழந்தனர். கால்நடைகள், நெற்பயிர்கள், தென்னை மற்றும் வாழை மரங்கள் இழப்பால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 90 சதவிகிதத் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன. தற்போது, இவற்றைக் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜ். தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் தென்னந்தோப்பு கஜா புயலினால் சேதமடைந்ததால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். கடந்த 6 நாட்களாகச் சோகத்தில் இருந்து வந்த சுந்தர்ராஜ், இன்று (நவம்பர் 22) தென்னைக்காக வைக்கப்பட்டிருந்த விஷ மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
ஒரு தென்னை மரத்துக்கு நிவாரணமாக 500 ரூபாய், அதை அகற்ற 600 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் 1,100 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
**திருவாரூரின் மின் சீரமைப்பு**
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் 7வது நாளாக மின் விநியோகம் முழுமையாக சீராகவில்லை. 2,000 மின் வாரியப் பணியாளர்கள் திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, மாவூர், பருத்திச்சேரி, தண்டலச்சேரி, வேளூர் உள்ளிட்ட இடங்களில் மின்சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
�,”