கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தொடர்பான அரசாணையை, இன்று (நவம்பர் 21) தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு உயிர் சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் ஐந்து நாட்களாகியும் மின் விநியோகம் சீராகவில்லை. மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், புயல் பாதிப்பைச் சரி செய்வதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்தது தொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை விவரம்
ரூ.1000 கோடியில் விவசாயத் துறைக்கு ரூ.350 கோடியும், மின்சாரத் துறைக்கு ரூ.200 கோடியும், குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட கட்டடப் பணிகளுக்கு 102.5 கோடியும், மனிதர்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு நிவாரணத்துக்கு ரூ.205.87 கோடியும், மீன்வளத் துறைக்கு ரூ.41.63 கோடியும், சேதமடைந்த வீடுகளுக்கான நிவாரணம் வழங்க ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உறுதி
தற்போது பெய்துவரும் தொடர்மழையால் கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படாது என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
“இந்தாண்டு தமிழகத்திலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள், இன்று 6ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. மழையிலும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். கஜா புயல் பாதித்த பகுதிகளில், தற்போது வரை 3 லட்சத்து 78 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டபகுதிகளில் 38 லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார் அமைச்சர்.
பள்ளிகள் திறப்பு
சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலினால் டெல்டா மாவட்டங்கள் பெருமளவிலான சேதத்தைச் சந்தித்துள்ளது. இதனால், அங்குள்ள பள்ளிகளுக்குத் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை (நவம்பர் 22) பள்ளிகள் திறக்கப்படும் என்றும், நாளை மாலைக்குள் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்குப் புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடலோரக் காவல்படை உதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடலோரக் காவல்படையினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். நாகை, காரைக்காலில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இயல்பு நிலை திரும்பும்
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1,400 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இரவுபகலாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்ட கிராமப் பகுதிகளில் 3 நாட்களில் மின்சாரம் வழங்கப்படும் என்றும், நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். இன்னும் ஓரிரு நாட்களில் 90% மீட்பு பணிகள் முடிந்து இயல்பு நிலை திரும்பும் என்று கூறினார்.
குழந்தைகள் நன்கொடை
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயக்குமார் என்பவருக்கு நிறைநெஞ்சன், சாதானா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தாமரைக்குளத்தில் உள்ள ராம்கோ சிமெண்ட் வித்யா மந்திர் பள்ளியில் 9ஆம் வகுப்பு மற்றும் 4ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும் கஜா புயல் பாதிப்புகளைப் பார்த்த இந்த குழந்தைகள், தாங்கள் சேர்த்து வைத்திருந்த ரூ.7,200 பணத்தை கஜா புயல் நிவாரண நிதிக்காக அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியைச் சந்தித்து வழங்கினர். ஆட்சியரும் அதிகாரிகளும் இந்த குழந்தைகளைப் பாராட்டினர்.
�,”