இந்தியாவுக்கு ஒரே விகிதாச்சாரத்தைக் கொண்ட ஜிஎஸ்டி வரி முறை சரியானதல்ல என்று முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. இதில், 5 விழுக்காடு, 12 விழுக்காடு, 18 விழுக்காடு, 28 விழுக்காடு என நான்கு விகிதாச்சாரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனினும், ஜிஎஸ்டியில் ஒரே விகிதாச்சாரத்தை நிர்ணயிப்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான ராகுல் காந்தியும் ஜிஎஸ்டியில் ஒரு விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க முன்மொழிந்து வருகிறார். இந்நிலையில், ஒரே விகிதாச்சாரத்தைக் கொண்ட ஜிஎஸ்டி வரி முறை இந்தியாவுக்குச் சரியானதாக இருக்காது என்று அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்த முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜூலை 11ஆம் தேதியன்று டெல்லியில் *National Council of Applied Economic Research (NCAER)* ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியாவில் ஒரே ஒரு விகிதாச்சாரத்தை நம்மால் வைத்துக்கொள்ள முடியாது. ஒரு நிலையான விகிதத்தையும், ஒரு உயர்வான விகிதத்தையும், ஒரு குறைவான விகிதத்தையும் நான் பரிந்துரைத்துள்ளேன். ஆகையால், இந்தியாவில் ஒரு விகிதாச்சாரத்தை வைத்துக்கொள்வது குறித்து விவாதிப்பதற்குப் பதிலாக, மூன்று விகிதாச்சாரங்களை நிர்ணயிப்பது குறித்து விவாதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.�,