ஐபிஎல் கிரிக்கெட் எப்போதும் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமல் இருந்துள்ளது. அப்படியொரு சுவாரஸ்ய சம்பவம் நேற்றைய போட்டியில் நடைபெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி களமிறங்கி ரன் வேட்டையில் ஈடுபட்டது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். சஃப்ரஸ்கான் 29 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார்.
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பிரித்வி ஷாவை அஸ்வின் வெளியேற்றினார். இருப்பினும் ஷிகர் தவன், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், காலின் இங்ரம் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டம் டெல்லி அணியில் கையில் இருந்தது.
21 பந்துகளுக்கு 23 ரன்கள் சேர்த்தால் வெற்றி, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. இரு முக்கிய பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தனர். முகமது ஷமி வீசிய 17ஆவது ஓவரில் இருந்து நிலைமை தலைகீழாக மாறியது.
ரிஷப்பந்த் 39 ரன்கள் சேர்த்த நிலையில் 4ஆவது பந்தில் வெளியேறினார். 5ஆவது பந்தில் ரன் அவுட் செய்யப்பட்டு மோரிஸ் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்தடுத்து இரு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி.
சாம்கரன் 18ஆவது ஓவரை வீச, 4ஆவது பந்தில் நாயரிடம் கேட்ச் கொடுத்து இங்ரம் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த படேல் ஒரு பந்தை சந்தித்த நிலையில் அதேஓவரின் கடைசிப்பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விஹாரி, ரபாடா இருவரும் களத்தில் இருந்தனர்.
19ஆவது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் விஹாரி 2 ரன்களில் வெளியேறினார். 20ஓவரை சாம் கரண் வீசினார். முதல் இரு பந்துகளிலும் ரபாடாவையும், லாமிசாவைனையும் வெளியேற்றி அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார் கரண்.
18ஆவது ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு விக்கெட்டும், அடுத்துதான் வீசிய 20ஓவரில் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார் கரண்.
19.2ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. பஞ்சாப் அணித் தரப்பில் சாம் கரண் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 8 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியைப் பறிகொடுத்துள்ளது டெல்லி அணி.
�,”