Pஏடிஎம் கார்டு: புதிய தீர்ப்பு!

Published On:

| By Balaji

மனைவி ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்த முடியாது என்று கர்நாடகாவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த தம்பதியர் வந்தனா, ராஜேஷ் குமார். 2013ஆம் ஆண்டு கர்ப்பகால விடுமுறையில் இருந்தபோது ராஜேஷிடம் தனது ஏடிஎம் கார்டு மற்றும் அதன் ரகசிய எண்ணைக் கொடுத்து ரூ.25,000 பணம் எடுத்துவரச் சொல்லியிருக்கிறார் வந்தனா. அதன்படி அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்திற்குச் சென்று ராஜேஷ் ரகசிய எண்ணைப் பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் பணம் எடுத்ததற்கான ரசீது வந்துள்ளது. பணம் வரவில்லை.

இதுகுறித்து எஸ்பிஐ உதவி மையத்தில் ராஜேஷ் புகார் அளித்துள்ளார். இதற்குப் பணத்தை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி மைய ஊழியர்கள் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கி அலுவலகத்துக்குச் சென்று பணம் கேட்டபோது, பணம் தர வங்கி நிர்வாகம் மறுத்துள்ளது. அதற்கு மாறாக, ‘நீங்கள் உங்கள் மனைவியின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தியது தவறு. உங்கள் மனைவியின் ஏடிஎம் ரகசிய எண்ணை உங்களிடம் பகிர்ந்தது எங்கள் விதிமுறைப்படி தவறு’ என்று பதில் அளித்துள்ளது.

இதனையடுத்து வங்கிக் கணக்குதாரரான வந்தனா தரப்பில் 2014ஆம் ஆண்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது ராஜேஷ் பணம் எடுக்கச் சென்றபோது பணம் எடுக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் பணம் வராமல் ரசீது மட்டும் வெளிவந்த காட்சி பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் வங்கித் தரப்பில் இருந்து ஏடிஎம் ரகசிய எண்ணைப் பகிர்ந்தது தவறு என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்குக்கு நுகர்வோர் நீதிமன்றம் கடந்த 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், “வங்கிக் கணக்குதாரரான வந்தனா நேரில் சென்று பணம் எடுக்க முடியாதபட்சத்தில் கணவர் ராஜேஷிடம் தேவையான பணத்துக்குக் காசோலையைக் கொடுத்திருக்கலாம் அல்லது பணம் எடுப்பதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து கையெழுத்திட்டுக் கொடுத்து பணம் எடுத்துவரச் சொல்லியிருக்கலாம். ஆனால், இவற்றுக்குப் பதிலாக ஏடிஎம் ரகசிய எண்ணைப் பகிர்ந்துகொண்டது வங்கி விதிகளை மீறியதாகிறது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவன், மனைவி மட்டுமின்றி ஒருவரது ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel