கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிக்காக மாநகராட்சி, நகராட்சி வார்டுகளுக்கு 50,000 ரூபாயும், பஞ்சாயத்து வார்டுகளுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெருமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவில், தற்போது புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வெள்ளத்தின் போது தேங்கிய குப்பைகளை அகற்றுவது, நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.2,600 கோடி வேண்டுமென்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன். தற்போது வரை கேரளாவுக்கு 680 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது மத்திய அமைச்சகம்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 22) கேரள அரசு ஒரு ஆணை வெளியிட்டுள்ளது. அதில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கு 25,000 ரூபாயும், மாநகராட்சி மற்றும் நகராட்சி வார்டுகளுக்கு 50,000 ரூபாயும் தூய்மைப்படுத்தும் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்குப் பலரும் நிதியளித்து வருகின்றனர். தற்போது வரை, இந்த நிதியில் 210 கோடி ரூபாய் வரை சேர்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் அம்மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக்.
இந்த வெள்ளத்தினால் கேரளாவில் சுமார் 10,000 கிலோமீட்டர் தூர சாலைகள் பழுதடைந்துள்ளன. இவற்றைச் சரிசெய்வதற்குத் தேவையான மூலப்பொருட்கள் கேரள அரசு வசம் இல்லை. இதனையொட்டி தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதேபோல, வெள்ளத்தினால் சுமார் 1 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
வெள்ளம் வடிந்த நிலையில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. காய்ச்சல், தலைவலி மற்றும் தோல் பாதிப்பு உள்ளிட்டவற்றால் அங்குள்ள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்குச் சிகிச்சையளிக்க, வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவர் குழுவை வரவழைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
வெள்ளத்தினால் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தவர்கள், மெதுவாகத் தங்களது வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். நேற்று (ஆகஸ் 21) மட்டும், எர்ணாகுளம் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்குச் சென்றனர். அம்மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடுகளில் பாம்புகள் புகுந்ததாகப் புகார்கள் எழுந்தன. மழையினால் காட்டிலிருந்து அடித்துவரப்பட்ட பாம்புகள், அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. பாம்பு கடித்த காரணத்தைக் கூறி, சிலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற மாவட்டங்களில் வெள்ள நிவாரணப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. மற்ற பகுதிகளில் இருந்து அம்மாவட்டம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள நிலையில் மாற்றமில்லாமல் இருந்து வருகிறது. இதனால், 7வது நாளாக அங்கு நிவாரணப் பணிகளை மாநில அரசு அதிகாரிகளால் மேற்கொள்ள முடியவில்லை.�,