அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்துக்கான டெண்டரை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
2018-19ஆம் கல்வியாண்டுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தின் கீழ் 59.09 லட்சம் ஜோடி காலணிகள் கொள்முதல் செய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் டெண்டர் கோரப்பட்டது. 2000ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தைப் பின்பற்றாமலும், உரிய விதிகளைப் பின்பற்றாமலும் இந்த டெண்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபத்தில் உள்ள ஷாம்சன் பாலிமர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவில், ரூ.114 கோடி மதிப்பிலான இந்த டெண்டர் குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் அமர்வு முன்பு நேற்று (நவம்பர் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி. மேலும், இந்த டெண்டர் நடவடிக்கைகளைத் தொடர தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு அனுமதியளித்தும் அவர் உத்தரவிட்டார்.�,