தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வரும் போதிலும் கொரோனா தொற்று அதிகரித்துகொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் சென்னையில்தான் அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இன்றும் சென்னையில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை இன்று (ஏப்ரல் 30) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் இன்று 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 138 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதுதவிர செங்கல்பட்டு, மதுரையில் தலா 5 பேரும், காஞ்சிபுரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூரில் இரண்டு பேருக்கும், அரியலூர், கடலூர், சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 906 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் 48 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 1258 பேர் குணமடைந்திருப்பதாகவும், கொரோனாவால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை என்றும், “10 வயதுக்கு கீழுள்ள 8 குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்களில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 142 பேர், 13 முதல் 60 வயதுக்குள் இருப்பவர்கள் 1929 பேர், 60 வயதை கடந்தவர்கள் 252 பேர் உள்ளனர்” என்றும் சுகாதாரத் துறை அறிக்கை கூறுகிறது.
**எழில்**
�,