விவோ நிறுவனம் இந்தியாவில் ரூ.4,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகச் சீனாவின் விவோ திகழ்கிறது. இந்நிறுவனத்துக்கு இந்தியாவின் நொய்டா நகரில் ஏற்கெனவே ஆலை உள்ளது. தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் தனது 2ஆவது ஆலையை அமைக்கவுள்ளது. இதுகுறித்து விவோ இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் நிபுன் மர்யா *தி எகனாமிக் டைம்ஸ்* ஊடகத்திடம் பேசுகையில், ”விவோ நிறுவனத்துக்கு கிரேட்டர் நொய்டாவில் ஏற்கெனவே 40 ஏக்கரில் ஒரு ஆலை உள்ளது. தற்போது உத்தரப் பிரதேசத்தில் 169 ஏக்கரில் இரண்டாவது ஆலை அமைக்கப்படவுள்ளது. இந்த ஆலையை அமைக்க முதற்கட்டமாக ரூ.800 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர நிலம் கையகப்படுத்துதலுக்குத் தனியாகச் செலவிடப்பட்டுள்ளது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்த ஆலை செயல்படத் துவங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் முதற்கட்டமாக 5,000 வேலைவாய்ப்புகளும் உருவாகும். இந்த ஆலையில் ஆண்டுக்கு 2.5 கோடி மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த ஆலையில் மொபைல் பாகங்கள் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார். விவோ நிறுவனத்தின் இரண்டாவது பெரிய ஆலையாக இது அமையவுள்ளது. ஏற்கெனவே சீனாவில் மிகப்பெரிய ஆலை இந்த நிறுவனத்துக்கு உள்ளது. அதுமட்டுமின்றி, இந்தோனேசியாவிலும் இந்நிறுவனத்துக்கு ஒரு ஆலை உள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தென் கொரியாவின் பிரபல மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், ரூ.4,915 கோடி முதலீட்டில் நொய்டாவில் உலகின் மிகப்பெரிய மொபைல் ஆலையைத் திறந்தது. மேலும், க்ஷியோமி உள்ளிட்ட மற்ற சில நிறுவனங்களும் இந்தியாவில் உற்பத்தி விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.�,