சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 2000க்கும் மேற்பட்டோர் சம வேலைக்குச் சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்திக் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுவந்தனர். இந்நிலையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஆசிரியர்கள் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.
தமிழகத்தில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் சென்னையில் உள்ள டி.பி.ஐ. அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த 23ஆம் தேதி தொடங்கினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல் துறையினர் கைது செய்து, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்துவைத்தனர். இந்நிலையில் அவர்களை ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து வள்ளுவர் கோட்டத்திற்கு அருகே உள்ள பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்குக் காவல் துறையினர் கடந்த 24 தேதி இரவு மாற்றினர்.
“எங்களை எந்த இடத்திற்கு மாற்றினாலும், எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை எங்களுடைய போராட்டம் தொடரும்” எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
தொடக்கக் கல்வி இயக்குனர் கருப்பசாமி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்கப் பிரநிதிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தினால் நான்காவது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் குடும்பங்களுடன் இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சுமார் 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக தனி நபர் குழு, அமைக்கப்பட்டுள்ளது. எனவே அரசாணையாக இதை வெளியிட முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களை அழைத்துப் பேசி உடனடியாகத் தீர்வு காண வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அரசாணையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறும்வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வி துறை செயலாளர் பிரதிப் யாதவ் இன்று பிற்பகலில் போராட்ட ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் ஆசிரியர்களுக்கு எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதைதொடர்ந்து, அரசு சார்பாக அமைச்சர் செங்கோட்டையன் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, ஆசிரிய சங்க நிர்வாகிகள் நான்கு நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதுதொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவிப்பது,” நான்கு நாட்களாக நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம். அரசு தரப்பில் இருந்து, மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, எங்களுடைய ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற நம்பிக்கையை அமைச்சர் கொடுத்துள்ளார். அதனால் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். அரசு எங்களுடைய இந்தக் கோரிக்கையை கட்டாயமாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் வீடு திரும்புகிறோம்” என்று கூறினார்கள்.�,”