அறநிலையத் துறையினரிடமிருந்து கோயில்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அறநிலையத் துறையை, அராஜகத் துறை என்றும் விமர்சித்துள்ளார்.
கோவையில் நேற்று (பிப்ரவரி 17) செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா, “தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கீழ் 38 ஆயிரத்து 635 கோயில்கள் உள்ளன. இவற்றில் ஏராளமான கோயில்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனைக் கண்டுபிடிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கோயில் ஆக்கிரமிப்புகளைக் கண்டறிய ஒரு குழு அமைக்க வேண்டும்.
கோவையில் உள்ள கல்லூரி ஒன்றுகூட கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இருப்பதை ஆவணங்கள் மூலம் கண்டறிந்து உள்ளோம். இதையெல்லாம் கவனிக்க வேண்டிய அறநிலையத் துறை அதிகாரிகள் அவற்றைக் கண்டுகொள்வதில்லை.
அறிநிலையத் துறையானது இந்து அறத்தை அழிக்கும் துறையாக உள்ளது. 1 லட்சம் குத்தகைதாரர்கள் குத்தகை கொடுப்பதில்லை. எனவே, தமிழக அரசு ஒரு குழு அமைத்து ஆறு வாரங்களுக்குள் ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும். கோயில் சொத்துகளில் எந்தெந்த இடம் வாடகைக்கு விடப்பட்டுள்ளவை, குத்தகைக்கு விடப்பட்டுள்ளவை, ஆக்கிரமிப்பில் இருப்பவை எவை என்பதை அறிக்கையில் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
கோயில்களை அறநிலையத் துறையிடம் இருந்து எடுத்துவிட்டால் சமூக நீதி போய்விடும் என்று கூறுகிறார்கள். கோயில் சொத்துகளைக் கொள்ளையடித்ததே திமுகவும் திகவும்தான்.
கோயில்களில் மின்சாதன பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்களை விற்கின்றனர். இது கோயிலா அல்லது பஜாரா? இந்து அறநிலையத் துறையினர் மிகக் கீழ்த்தரமாக நடந்துள்ளார்கள்.
எனவே, இந்து கோயில்கள், அராஜகத் துறையிடம் இருந்து மீட்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருவதாகப் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து பேசுகையில், “அவரது கருத்து சரிதான். அதை எதிர்ப்பவர்களுக்குப் புத்தி சுவாதீனம் இல்லை என்று அர்த்தம். திமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுகூட திமுகவால் வாக்குகளைப் பெற முடியவில்லை. ஆர்.கே.நகரில் டெபாசிட் போய் விட்டது. வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்” என்று தெரிவித்தார்.�,