pஅரசியல் ஆலோசனையில் அஜித் பங்கேற்கவில்லை!

Published On:

| By Balaji

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இல்லத்தில் நடந்த பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் தான் அஜித் தோவல் பங்கேற்றார் என்றும், அன்று நடந்த பாஜக ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கிழக்குப்பகுதியிலுள்ள மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 14) மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் வீட்டில் பாஜகவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ராம் மாதவ் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றதாகத் தகவல் வெளியானது.

இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பங்கேற்றதாக, திரிபுரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பிஜான் தார் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதினார். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டுமென்றும், அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது உள்துறை அமைச்சகத்துக்கு பெரிய அளவில் நெருக்கடியை உண்டாக்கியது.

இந்த நிலையில், நேற்று (ஜனவரி 17) உள்துறை அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் வீட்டில் நடந்த கட்சி ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக, தினம்தோறும் காலையில் பாதுகாப்புதுறை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை செய்வது வழக்கம். மூத்த அதிகாரிகள் இதில் கலந்துகொள்வார்கள்.

கடந்த ஜனவரி 14 அன்று நடந்த கூட்டத்தில், மற்ற பாதுகாப்புத்துறை அதிகாரிகளோடு தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவலும் பங்கேற்றார். அன்றைய தினம் உள்துறை அமைச்சர் பங்கேற்ற அரசியல் கூட்டம் எதிலும், இந்த அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை” என்று அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாஜகவின் உள்கட்சி ஆலோசனை கூட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர் பங்கேற்றார் என்ற சர்ச்சை, இதன் மூலமாக முடிவுக்கு வந்துள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share