�
வயதுக்கு மீறிய அனுபவமிக்க கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக பூமிகா தெரிவித்துள்ளார்.
பத்ரி, ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற குறிப்பிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் பூமிகா. இவரது நடிப்பில் வெளியாகியுள்ள களவாடிய பொழுதுகள் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே அவர் அந்த படத்தில் நடித்திருந்தார். பணப்பிரச்சினை காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சினிமாவிலிருந்து சற்று விலகியிருந்த அவர் நானி, சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி உள்ள எம்சிஏ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
மேலும் நாகசைதன்யாவின் ஷாவ்யாசச்சி என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிகா தான் மீண்டும் படங்களில் நடிக்கவந்திருப்பது குறித்து பேசும் போது, “எம்சிஏ மூலம் மீண்டும் திரை உலகிற்குள் வலம் வர வாய்ப்பு கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது பல இயக்குநர்கள் என்னிடம் கதை கூறி வருகின்றனர். குறிப்பிட்ட வேடத்தில் தான் நடிப்பேன் என்றில்லை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், கதையோடு ஒன்றியதாக இருந்தால் நடிப்பேன். வயதை மீறிய நல்ல அனுபவமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என ஆசை. என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
�,”