சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவே டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தை எடுப்பதாகவும், லாப நோக்கத்திற்காக இல்லை என்றும் இயக்குநர் அஜய்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்ற போதும் நீட் தேர்வு காரணமாக எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரமுடியாமல் போனதால் அரியலூர் குழுமூரை சேர்ந்த அனிதா தற்கொலை செய்துகொண்டார். அந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அனிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான அஜய்குமார் திரைப்படம் எடுத்து வருகிறார்.
அனிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், பணம் சம்பாதிக்கும் நோக்கோடும் திரைப்படம் எடுக்கப்படுவதாகக் கூறி படத்தை எடுக்கத் தடை கோரி அனிதாவின் தந்தை சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்னிலையில் இயக்குநர் அஜய்குமார் தற்போது பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் தான் படத்தை எடுப்பதாகவும், லாப நோக்கத்திற்காக எடுக்கவில்லை என்றும், தங்கநகைகளை அடகு வைத்தும், நண்பர்களிடம் இருந்து கடன் பெற்றும், இந்தத் திரைப்படத்தை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, செல்வி டாக்டர் அனிதா, அனிதா எம்.பி.பி.எஸ்., அனிதாவின் கனவுகள் என்று பல குறும்படங்கள் வெளிவந்துள்ளதாகவும், தனது படத்தில் அனிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவோ, பா.ஜ.க.வின் கொள்கையை வெளிப்படுத்தவோ இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார். தன்னுடைய படத்தை பார்க்காமலேயே, அனிதாவின் தந்தை இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதால் வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதனையடுத்து வழக்கு விசாரானையை 2 வாரங்களுக்குத் தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.�,