கடலூர் மாவட்ட பண்ருட்டி அருகில் போலியான பெயரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செயல்பட்டுவந்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் எல்.என்.புரம் ஊராட்சியில் ஸ்டேட் பேங்க் நகர் உள்ளது. இங்கு எண் 638இல், முன்னாள் வங்கி ஊழியர் மகன் கமால்பாபு வீட்டுக்குள்ளே மினி ஸ்டேட் பேங்க் நடத்திவருவதாக, சிலர் பண்ருட்டி எஸ்பிஐ முதன்மை மேலாளர் வெங்கடேஷிடம் புகார் சொல்லி நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுக்கிறார்கள். இதை விசாரித்து மேலாளர் வெங்கடேஷ் பண்ருட்டி காவல்நிலையத்தில் கடந்த 8ஆம் தேதி புகார் கொடுக்க, தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்கிறார். (குற்ற எண் 1349/2020) 465, 473, 469, 484, 109 ஆகிய சட்டப் பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் எல்.என்.புரம் ஸ்டேட் பேங்க்கில் இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். பின்னர் போலியாகச் செயல்பட்டதாகச் சொல்லப்படும் வங்கிக்குள் நுழைந்து, மேலாளராகச் சொல்லிக்கொண்ட கமால் பாபுவை கைதுசெய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
போலி வங்கி நடத்திவந்தாரா கமால்பாபு? விசாரணையில் இறங்கினோம்.
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சையத் கலீல், எஸ்.பி.ஐ,யில் பணிசெய்துவந்தார். எஸ் பி ஐ.யில் தன்னுடன் பணி செய்த இந்து மதத்தைச் சேர்ந்த லட்சுமியைக் காதல் திருமணம் செய்துகொண்டார். லட்சுமி- சையத் கலீல் தம்பதியர்களுக்குக் குழந்தை இல்லாததால் வளர்ப்பு பிள்ளையாக கமால் பாபு என்பவரை தத்தெடுத்தார்கள்.
கலீல், லட்சுமி இருவருமே வங்கி ஊழியர்கள் என்பதால்… வங்கிக்குப் போகும்போது குழந்தையாக இருந்த கமால்பாபுவை அழைத்துப் போய் வங்கியில் உட்காரவைத்து பணிசெய்வார்கள். கமால் பாபு பத்தாவது படிக்கும்போதே, வங்கிக்கு அழைத்துப்போய் வேடிக்கையாக வங்கி வேலைகளையும் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். கமால் பாபுவை செல்லமாக வளர்த்து வந்தார்கள், வெளி உலகம் தெரியாமல் எங்கே சென்றாலும் உதவிக்கு ஒரு ஆள் போட்டு ஆட்டோவில் அனுப்பிவைப்பார்கள். கமால் பெரிய பிள்ளையாக வளர்ந்த பிறகும் தாய் தந்தை அவரை குழந்தையாகவே பாவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தந்தை சையத் கலீல் சில வருடங்களுக்கு முன், வங்கியில் பணியில் இருக்கும்போதே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறந்துவிட்டார். அது கமால் பாபுவை கடுமையாக பாதித்துவிட்டது. எப்போதும் அம்மா, அப்பா, வங்கி என்றே இருந்த கமால் பாபுவுக்கு வங்கியிலேயே தன் அப்பா இறந்துபோனது மன ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. தந்தை தனக்கு பணி செய்து கற்றுக் கொடுத்த அதே வங்கியிலேயே வேலை செய்ய வேண்டும் என்று விரும்பிய கமால் பாபு, தந்தை பணிசெய்த வங்கியின் மேலாளருக்கு மின் அஞ்சல் மூலமாக வாரிசு அடிப்படையில் வேலை கேட்டுள்ளார். பல முறை கேட்டும் வங்கியில் பணி கிடைக்கவில்லை. இந்த நிலையில் மன ரீதியாக அதிக பாதிப்புக்கு உள்ளான கமால் பாபு, அதே எல்.என்.புரத்தில் வடக்கு பஜாரில் எஸ்பிஐ வங்கியின் கிளை செயல்பட அனுமதி கேட்டும் ஒரு மின் அஞ்சலை மேலாளருக்கு அனுப்பியிருக்கிறார். அப்போதே அவர்கள் இதுகுறித்து முழுமையாக விசாரித்திருக்க வேண்டும். ஆனால் விட்டுவிட்டார்கள். லட்சுமி ஓய்வுபெற்று பென்ஷன் வாங்கிவருகிறார். கைநிறைய பணம் வருகிறது அசையா சொத்துகள் அதிகமாக உள்ளது. பணத்தைச் செலவு செய்யமுடியாமல் வட்டிக்கு விட்டுவருவதாகச் சொல்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.
தன் அப்பா இறந்த துக்கம், அவர் கற்றுக் கொடுத்த பணியை அவர் வேலை பார்த்த வங்கியிலேயே செய்ய முடியாத மன அழுத்தம் ஆகியவற்றால் சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்குள்ளேயே வங்கிபோல் ஒரு செட்டப் அமைத்துக் கொண்டார் கமால் பாபு. அதாவது கம்ப்யூட்டர், பிரிண்டர், வருகை பதிவேடு, ஸ்டேட் பேங்க் செ லான், ஸ்டேட் பேங்க் சீல் எல்லாம் தயார் செய்து வைத்துக்கொண்டார். வங்கியில் 16 பேர் வேலை செய்வதுபோல் வருகை பதிவேடுகளைத் தயாரித்து அவரே அட்டெண்டன்ஸ் போட்டுவந்துள்ளார்.
தன்னுடைய இந்த ‘வீட்டு வங்கி’யில் அம்மாவின் அக்கவுன்ட்டிலிருந்து பெரியம்மாவின் அக்கவுன்ட்டுக்கும், பெரியம்மா அக்கவுன்ட்டிலிருந்து தனது அக்கவுன்ட்டுக்கும் ஆன் லைனில் பணப் பரிமாற்றம் செய்துவந்துள்ளார். அம்மா, பெரியம்மா கணக்கு எண் மற்றும் பாஸ்வர்டு தெரிந்திருப்பதால் பரிமாற்றம் செய்துள்ளார். மற்ற அந்த வங்கிக் கணக்கிலும் இவர் எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் இந்த குடும்பத்தினரிடம் வட்டிக்கு வாங்கிய ஒரு கும்பல், இவரது நிலையை பயன்படுத்தி ஏமாற்றும் நோக்கில், எஸ் பி ஐ பெயரில் வங்கி நடத்துவதாக வங்கி நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். வங்கி அதிகாரிகள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ஸ்டேட் பேங்க் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப், செலான் ஆகியவை இருந்ததால் போலீஸிடம் புகார் அளித்துவிட்டார்கள்.
ரப்பர் ஸ்டாம்ப் செய்து கொடுத்தவர் மற்றும் செலான் பிரின்ட் செய்துகொடுத்தவர்களையும் கைது செய்தபோலீஸ் அவர்களிடம் விசாரிக்கும்போது, “அவங்க குடும்பமே எஸ்பிஐயில வேலை செஞ்சவங்க. அதனால வங்கிக்காகதான் ஆர்டர் கொடுத்தார்கள் என்று செய்து கொடுத்துட்டோம். மற்றபடி எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை” என்று கூறியுள்ளார்கள். போலீஸ் விசாரணையில் கமால் பாபு, “சார்… என் பேங்க்கை கூடிய சீக்கிரம் நான் ஓப்பன் பண்ணுவேன்” என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் கமால் பாபு கைது செய்யப்பட்டு கடலூர் கிளைச் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பணியிடங்களுக்கு அழைத்துச் செல்வதால், இப்படி ஒரு விளைவு ஏற்படும் என்று கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு நடந்திருக்கிறது இந்த சம்பவம். மனதுக்குள்ளேயே ஒரு வங்கி அதிகாரியாக வாழ்ந்துள்ள கமால் பாபு, மிகப்பெரிய வங்கியாளராக வரவேண்டியவர். போலி ரப்பர் ஸ்டாம்ப், போலி செலான் ஆகிய குற்றங்கள் அந்த 19 வயது இளைஞனுக்குள் இருக்கும் வங்கி ஆளுமையை முடக்கிப் போட்டிருக்கின்றன என்கிறார்கள் வங்கி ஊழியர்கள் சிலரே.
உளவியலாளர்களும், வங்கியாளர்களும் கமால் பாபுவை சந்தித்து உரையாட வேண்டும்!
**-காசி**�,”