மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசித்தது என்ன?

Published On:

| By Balaji

தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்தது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து ஊரடங்கு மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. மே 31ஆம் தேதியோடு ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது/ தளர்த்துவது அல்லது அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து அவர்களின் பரிந்துரைப்படி, நடவடிக்கை எடுத்து வந்தார்.

அதன்படி இன்று நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் சஸ்பென்ஸ் நீடிக்கும் நிலையில், இன்றைய கூட்டத்தில் என்னென்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பாகச் செயல்படுத்தப்பட வேண்டிய புதிய உத்திகள் (Testing Strategies)

மருத்துவச் சிகிச்சை குறித்த வழிமுறைகள் / நெறிமுறைகள் (Treatment Protocols)

இறப்புகளைத் தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் (Flattening the death curve)

நோய்த் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களை (Vulnerable group) கண்டறிந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்.

தேவைக்கேற்ப மருத்துவ வசதிகள், கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் (Preparedness in Hospitals).

மேற்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்து தமிழ்நாட்டில் குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை (Prevention and Containment Activities) மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ் ஆகியோரும், ஜெனீவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், ஈரோட்டிலிருந்து இந்திய மருத்துவக் கழகத் தலைவர் சி.என். ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் மே 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share