wரேஷன் கடைகளில் வெளியாட்கள் இருக்கக் கூடாது!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் சம்பந்தப்பட்ட ஊழியர்களை தவிர வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறது. ஆட்சியர்கள் ரேஷன் கடைகளை ஆய்வு செய்து மாதந்தோறும் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அனைத்து கடைகளிலும் புகார் பதிவேடு வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் நேற்று (ஜூலை 20) பிறப்பித்துள்ள உத்தரவில், “ரேஷன் கடைகளில் ஊழியர்களை தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது. வெளிநபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். வெளியாட்களை அனுமதிக்க துணைபோகும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கடை ஊழியர்கள் ஒரே கடையில் தொடர்ந்து பணி புரிவதால் அவர்களுக்குத் தொடர்புடைய வெளி நபர்கள் கடைகளில் இருக்கின்றனர். இதனால் பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். ஆகவே ரேஷன் கடை ஊழியர்கள் மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே கடையில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாறு இருப்போர் உடனடியாக வேறு கடைகளுக்கு மாற்றப்படுவர்.

இதுகுறித்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் விவாதித்து தேவையான நடவடிக்கைகளை அவ்வப்போது எடுக்க வேண்டும்.

இதற்கு பிறகும் ரேஷன் கடைகளில் வெளி நபர்கள் இருப்பதாகப் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளரே பொறுப்பு எனக் கருதி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் விற்பனையாளர், உதவியாளர் தவிர, சம்பந்தமில்லாத வேறு நபர்கள் இருப்பதாக தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share