பத்து வருடங்களுக்கு முன் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த தமிழ் இனப் படுகொலை பற்றிய விவாதம் மீண்டும் உலக அரங்கின் மையத்திற்கு வந்துள்ளது. காரணம், இலங்கையின் இப்போதைய ராணுவத் தலைமைத் தளபதி போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருப்பதால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்கா அரசு விசா மறுத்திருக்கிறது. பிப்ரவரி 14 ஆம் தேதி அமெரிக்காவின் வெளி விவகாரத்துறை இதை அறிவிக்க, அமெரிக்காவுக்கு இலங்கை அரசு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.
இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது நீதிக்கு புறம்பான கொலைகளில் ஈடுபட்டதால் ஷவேந்திர சில்வாவை அமெரிக்காவிற்குள் நுழைய தகுதியற்றவர் என்று நான் அறிவிக்கிறேன்” என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கடந்த 14 ஆம் தேதி ஒரு ட்வீட்டில் தெரிவித்தார். ஷவேந்திர சில்வா மீதான மொத்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இதற்கு உடனடியாக பதில் கொடுத்த இலங்கை வெளிவிவகாரத் துறை அமைச்சகம், “சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில், லெப்டினன்ட் ஜெனரல் சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்க அரசாங்கத்தால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு இலங்கை அரசு கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் ராணுவத் தளபதியாக சில்வா நியமிக்கப்பட்டார். அப்போதே அமெரிக்கா மற்றும் ஐ.நா.விலிருந்து கடுமையான விமர்சனங்களை கிளப்பியது.
இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டமான 2009 போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவத்தை சில்வா வழிநடத்தினார். . மோதலின் கடைசி கட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ‘நோ ஃபயர் சோன்’ எனப்படும் மண்டலங்களில்தான் பல பேர் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள் உட்பட பல இடங்கள் தொடர்ச்சியான ராணுவ ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகின.
யுத்தத்தின் இறுதி வாரத்தில் வெள்ளைக் கொடியுடன் நிராயுதபாணியாக சரணடைந்த கிளர்ச்சியாளர்களை சில்வா சட்டவிரோதமாக கொன்றதாக, ஐ.நா குழு குற்றம் சாட்டியது. அரசாங்க காவலில் உள்ளவர்களை சித்திரவதை செய்ததாகவும் சில்வா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனே இன்று (பிப்ரவரி 16) கொழும்புவில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்ளிட்ஸ்சை சந்தித்தார்.
“லெப்டினன்ட் ஜெனரல் சில்வா ராணுவத் தளபதியாக அப்போதைய அதிபரால் நியமிக்கப்பட்டார். அவருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரமான அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை” என்று எடுத்துக் கூறியுள்ளார்.
ஆனாலும் அமெரிக்காவின் முடிவில் இதுவரை மாற்றமில்லை. அமெரிக்க அரசியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் கடைசி பத்தியில்,
“உலகெங்கிலும் உள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை எப்போது நிகழ்ந்தது அல்லது யார் செய்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், மனித உரிமைகளைக் காப்பாற்ற கிடைக்கக்கூடிய அனைத்து கருவிகளையும், வாய்ப்புகளையும் அமெரிக்கா தொடர்ந்து பயன்படுத்துகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் மனித உரிமைகளை ஆதரிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும், அமைதியான, நிலையான மற்றும் வளமான இலங்கைக்கு ஆதரவாக நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன” என்று கூறியிருக்கிறது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றிய விவாதம் சர்வதேச அரங்கில் நடந்து வருகிறது.
**-வேந்தன்**
�,”