மகாராஷ்டிரா விவகாரம்: அவைக்காவலர்களிடம் காங்கிரஸ் எம்பிக்கள் மோதல்!

Published On:

| By Balaji

மகாராஷ்டிரா அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் கூட்டணியை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களின் கடிதத்தை காங்கிரஸ்-என்.சி.பி-சேனா தலைவர்கள் ராஜ்பவனில் சமர்ப்பித்தனர். அதே வேளையில் காங்கிரஸ் எம் .பிக்களுக்கும் அவைக்காவலர்களுக்கும் ஏற்பட்ட மோதலால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் நடந்து வரும் அரசியல் மோதல்களுக்கு மத்தியில், காங்கிரஸ்-என்.சி.பி-சிவசேனா கட்சிகளின் மூத்த தலைவர்கள் இன்று காலை ராஜ்பவனுக்கு வந்தனர்.

மூன்று கட்சியின் தலைவர்களும் தங்கள் கூட்டணியை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களின் கடிதத்தை ராஜ்பவனில் உள்ள அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். காங்கிரஸ்-என்.சி.பி -சிவசேனா எழுதிய கடிதத்தில், தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லையென்றும், தங்கள் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், “மூன்று கட்சிகளைச் சேர்ந்த தூதுக்குழு, ராஜ்பவனில், எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பை விடுக்குமாறு கோரிக்கையை வைத்துள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.

பாஜக தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிராக காங்கிரஸ்-என்.சி.பி-சேனா கூட்டாக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், ராஜ்பவனில் இச்சந்திப்பு நடந்துள்ளது.

**மதியம் வரை மக்களவை ஒத்திவைப்பு**

மக்களவை இன்று காலை தொடங்கியது. அவை தொடங்கும் முன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அந்தக் கட்சியின் எம்.பி.க்கள், என்சிபி கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தினார்கள். சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்தைத் தொடங்குவதாகவும், கேள்விகள் கேட்கலாம் என்றும் அறிவித்தார். மக்களவையில் காங்கிரஸ், என்சிபி, சிவசேனா எம்.பி.க்கள் மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் குழப்பம் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவி ஏற்றதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அவை தொடங்கியதில் இருந்தே எம்.பி.க்களின் முழக்கத்தால் அவையில் கடும் அமளி நிலவியது.

அப்போது அவையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “கேள்வி நேரத்தில் எந்தவிதமான கேள்வியும் கேட்கப் போவதில்லை. மகாராஷ்டிராவில் ஜனநாயகக் கொலை நடத்தப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ், சிவேசேனா, என்சிபி எம்.பி.க்கள் பலர் கையில் பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராகவும், மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா எம்.பி.க்கள் அனைவரும் அமைதி காக்கும்படியும், பதாகைகளைக் கீழே போடும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹிபி எடன், பிரதாபன் ஆகியோர் “ஜனநாயகப் படுகொலையை நிறுத்து” என்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை தூக்கிப் பிடித்தவாறே கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்கள் ஹிபி எடன், பிரதாபன் இருவரையும் அவையில் இருந்து வெளியே அனுப்ப அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சபையில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டதையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒரு பகுதியினர் அவைக்காவலர்களுடன் மோதினர். மக்களவை அவைக்காவலர்களிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் மோதியபோது பாஜக எம்.பி.க்கள் சிலர் தலையிட முயன்றனர். ஆனால் கட்சி தலைமை கொறடா சஞ்சய் ஜெய்ஸ்வால் முன் வந்து அவர்களை திரும்பி செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

இருந்தும், அவையில் தொடர்ந்து கூச்சல் நிலவியதால், அவையை மதியம் 12 மணிவரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

**பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு**

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பாஜகவை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க முயல்கிறது. அரசிலமைப்புச் சட்ட அமைப்புகளையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் புறக்கணித்துள்ளது பாஜக என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் பாஜக என்ன விளையாட்டு விளையாடியதோ அதையேதான் மகாராஷ்டிராவிலும் பாஜக நிகழ்த்துகிறது.

12 ஆயிரம் விவசாயிகள் மகாராஷ்டிராவில் தற்கொலை செய்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு பாஜகவின் பாக்கெட்டில் இருந்து இதுவரை ஒரு உதவியும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பொதுப்படையாக எம்எல்ஏக்கள் கடத்தப்படுவதைப் பார்க்கத்தான் மக்கள் வாக்களித்துள்ளார்களா? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share