ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி, தனக்கு நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுவதாகப் பிரதமர் மோடியிடம் புகார் அளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது அனைவரின் தினசரி வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆன்லைனில் படிக்கும்போது, ஜம்மு – காஷ்மீரில் ஆறு வயது சிறுமி நீண்ட நேரம் நீடிக்கும் ஆன்லைன் வகுப்புகளால் சோர்ந்து போயுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளிக்க முடிவு செய்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
சிறுமி வெளியிட்டுள்ள வீடியோவில், தனது ஆன்லைன் வகுப்பானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிவடைகிறது. ஆங்கிலம், கணிதம், உருது, ஈவிஎஸ் மற்றும் கணினி ஆகிய வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கும் நிறைய வேலை இருக்கிறது” என்று கைசைகைகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் சிறுமி எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் காட்டுகிறார்.
A six-year-old Kashmiri girl’s complaint to @PMOIndia @narendramodi regarding long hours of online classes and too much of school work. pic.twitter.com/S7P64ubc9H
— Aurangzeb Naqshbandi (@naqshzeb) May 29, 2021
மேலும், “சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்” என தன்னுடைய மழலை மொழியில் கேள்வி கேட்டுவிட்டு, “என்ன செய்ய முடியும் மோடி சார்” என கூறிவிட்டு ‘பை’ சொல்லிவிட்டு முடிகிறது அந்த வீடியோ.
தற்போது, இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதை 57,000 பேர் பார்த்துள்ளனர், 5,000 லைக்ஸ்கள் விழுந்துள்ளன. 1,200 பேர் ரீட்விட் செய்தது மட்டுமில்லாமல், சிறுமியின் புகாருக்குப் பதிலளித்துள்ளனர்.
இந்த வீடியோவுக்கு பிரதமர் மோடி இன்னும் பதிலளிக்கவில்லை என்றாலும், ஜம்மு – காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர், “மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புகார். பள்ளி குழந்தைகள் மீதான வீட்டுப்பாடங்களின் சுமையைக் குறைக்க 48 மணி நேரத்திற்குள் முடிவு எடுக்குமாறு பள்ளி கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தை பருவம் கடவுளின் பரிசு மற்றும் அவர்களின் நாட்கள் கலகலப்பாகவும், மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிறைந்ததாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
**-வினிதா**
�,”