�அழுத்தத்தைக் கையாள முடியவில்லை: டெல்லி வன்முறை வழக்கில் உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Balaji

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில், ”எங்களால் முழு அழுத்தத்தையும் கையாள முடியவில்லை” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த 24ஆம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள், சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் 48 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வன்முறையைத் தூண்டும் வகையில் வெறுப்புணர்வுடன் பேசிய கபில் மிஸ்ரா உட்பட மூன்று பாஜக தலைவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வழக்கில் டெல்லி காவல்துறைக்கும், மத்திய அரசுக்கும் கடுமையான கேள்விகளை எழுப்பிய நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் வெறுப்புணர்வுடன் பேசிய பாஜக தலைவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி வட கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று (மார்ச் 2) தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோன்சால்வேஸ், “இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதியும் மாற்றப்பட்டார். நாள்தோறும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவசரம் கருதி இந்த மனுவை உடனே விசாரிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி, ”உடனடியாக நாங்கள் என்ன செய்ய முடியும்?. எங்கள் மீது முழு அழுத்தம் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த முழு அழுத்தத்தையும் எங்களால் கையாள முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க எங்களிடம் சக்தி இல்லை. நிர்வாகம் தான் அதனைச் சரி செய்ய வேண்டும். அமைதியைத் தான் நாங்களும் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

அப்போது வாதிட்ட வழக்கறிஞர் கோன்சால்வேஸ், உங்களால் நிறைய விஷயத்தைக் கையாள முடியாது என்பது தெரியும். உங்களை வழிநடத்த நாங்கள் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி வழக்கை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share