விமானத்தின் நடு இருக்கை விவகாரம்: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Published On:

| By Balaji

விமானங்களில் நடுப்பகுதி இருக்கைகளில் அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே, பயணிகளை அமர வைக்க அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், மக்கள் நலனில் அக்கறை வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமானியான தேவன் கனணி அண்மையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அப்போது விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட நிபந்தனையில், பயணிகள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கைகள் நிரப்பப்படாமல் காலியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

ஆனால் வெளிநாடுகளில் சிக்கியிருப்பவர்களை அழைத்து வரும் ஏர் இந்தியா விமானத்தில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். அதோடு, சான் பிரான்சிஸ்கோவிற்கும் மும்பைக்கும் இடையில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தின் இருக்கைகளில் பயணிகள் நடு இருக்கைகளில் அமர வைப்பது குறித்த புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த மனுவை எதிர்த்து ஏர் இந்தியா ஆலோசகர் அபினவ் சந்திரசூட் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “மே 22ஆம் தேதி உள்நாட்டு விமானங்கள் இயக்குவது குறித்து மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், நடு இருக்கைகள் காலியாக வைக்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் விமானத்தில் நடு இருக்கை பயணச் சீட்டை விற்கத் தடை விதித்ததுடன், இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனமும், விமான போக்குவரத்து ஆணையமும் ஜூன் 2ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மத்திய அரசும், ஏர் இந்தியாவும் அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று இரவு மனுத் தாக்கல் செய்தன. மனுவின் அவசரம் கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையை அடுத்து ரம்ஜான் விடுமுறை தினமான இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

காணொளி காட்சி மூலம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ஹிர்ஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு மற்றும் ஏர் இந்தியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, “கொரோனாவை தடுப்பதற்குச் சோதனையும், தனிமைப்படுத்தலும் தான் சிறந்த நடைமுறை. அதைத் தவிர்த்து இருக்கை வேறுபாடு அல்ல. நடு இருக்கைகள் காலியாக விட வேண்டாம் என்று வல்லுநர்களிடம் ஆலோசித்த பிறகுதான் முடிவெடுக்கப்பட்டது. குடும்பத்துடன் வருபவர்கள் 3 பேராக இருக்கையில் அமரவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள், “கொரோனா காலத்தில் சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பது அடிப்படை அறிவு சார்ந்த விஷயம். பொது இடங்களில் 6 அடி தூரம் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படி என்றால் விமானத்துக்குள் எப்படி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். அதோடு, விமானத்தின் நடுப்பகுதி இருக்கையில் அமர்ந்தால் கொரோனா பாதிக்காது என்று எப்படி உங்களால் கூற முடியும். அல்லது இது விமானம், இங்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்று வைரசுக்குத்தான் தெரியுமா? என்று கேள்விகளை எழுப்பியதுடன் சமூக விலகல் இல்லாமல் இருந்தால் நிச்சயம் பாதிப்பு ஏற்படச் சாத்தியம் உண்டாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வரும் ஜூன் 6ஆம் தேதி வரை முன்பதிவு முடிந்துவிட்டது. நடுப்பகுதி இருக்கைகளும் நிரப்பப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜூன் 6ஆம் தேதி வரை நடுத்தர இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்து, அதன் பிறகு நடுப்பகுதி இருக்கைகளில் பயணிகளை அமரவைக்கக் கூடாது. நடுப்பகுதி இருக்கைகளை முன்பதிவில் காட்டக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.

வர்த்தக ரீதியாகச் செயல்படும் விமானங்கள் போல் அல்லாமல், மக்கள் மீது அக்கறையும் கவலையும் கொண்டு செயல்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர். அதோடு வரும் ஜூன் 2ஆம் தேதி இவ்விவகாரத்தை விசாரிக்கலாம். விமானி தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்து முடிவெடுக்கலாம். பயணிகளின் நலன் கருதி மும்பை உயர் நீதிமன்றம் எடுக்கும் முடிவை, ஏர் இந்தியா மட்டுமின்றி அனைத்து விமானங்களும் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share