தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தொடர்ந்திருந்தார். அதில், ஈரோட்டில் பவானி ஆறு, காளிங்கராயன் கால்வாயில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால் அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைப்பதில்லை. தமிழ்நாடு அரசு 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் பிறப்பித்த அரசாணைகளின் அடிப்படையில் அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று(அக்டோபர் 22) நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில், சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வுகள் மூலம் கண்டறிவதாகவும், அவ்வாறு எடுக்கப்பட்டால் குழாய்கள் அகற்றப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய நீதிபதி, உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஆதாரமாக விளங்குவது தண்ணீர். அது ஒரு தரப்பினருக்கு மட்டும் கிடைப்பதாக அமைந்துவிடக் கூடாது. கிடைக்கின்ற தண்ணீரை அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும்,தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது பொதுப்பணித் துறை குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் தண்ணீரை பகிர்ந்தளிப்பதற்கான கொள்கையை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,