கிச்சன் கீர்த்தனா: ஆரஞ்சு க்ரான்பெர்ரி கேக் (எக்லெஸ்)

Published On:

| By Balaji

பிறந்த நாளுக்கும் கேக்குக்குமான தொடர்பு கிறிஸ்துவுக்கும் முன்பே ஆரம்பமாகிவிட்டது. பண்டைக் காலத்திலேயே கிரேக்கர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தேன் கலந்த கேக் அல்லது ரொட்டி உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். ரோமானியர்கள் மூன்றுவிதமான பிறந்த நாட்களைக் கொண்டாடினார்கள். மனிதர்களுக்கான பிறந்த நாள்; ஊர்கள், கோயில்கள் அல்லது இடங்களுக்கான பிறந்த நாள்; முன்னாள் – இந்நாள் அரசர்களின் பிறந்த நாள். எல்லா கொண்டாட்டங்களிலும் கேக்தான் பிரதானம். வரவிருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்களில் இந்த முட்டையில்லாமல் தயாரிக்கப்படும் ஆரஞ்சு க்ரான்பெர்ரி கேக் செய்து நீங்களும் கொண்டாடுங்கள்

**என்ன தேவை?**

கோதுமை மாவு – ஒரு கப்

சர்க்கரை – அரை கப்

கார்ன் மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்

ரிஃபைண்ட் எண்ணெய் – கால் கப் + 2 டேபிள்ஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் – ஒரு கப்

துருவிய ஆரஞ்சுப்பழத் தோல் – 2 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்

ஆரஞ்சு எசென்ஸ் – அரை டீஸ்பூன்

ஆரஞ்சு நிற ஃபுட் கலர் (விருப்பப்பட்டால்) – கால் டீஸ்பூன்

உலர்ந்த க்ரான்பெர்ரி பழம் – 2 டேபிள்ஸ்பூன்

**எப்படிச் செய்வது?**

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். கோதுமை மாவு, கார்ன் மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை இரண்டு முறை சலித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, கால் கப் எண்ணெய், இரண்டையும் சேர்த்து சர்க்கரை கரைந்து க்ரீம் போல ஆகும்வரை நன்கு அடிக்கவும். பிறகு இதனுடன் ஆரஞ்சு ஜூஸையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் அதில் துருவிய ஆரஞ்சுப்பழத் தோல், ஆரஞ்சு எசென்ஸ், ஒரு டேபிள் ஸ்பூன் க்ரான்பெர்ரி பழம், ஆரஞ்சு ஃபுட் கலர் மற்றும் சலித்துவைத்துள்ள கோதுமை மாவு ஆகியவற்றை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பேக்கிங் பானில் எண்ணெய் தடவவும். அதில் பேக்கிங் பேப்பரை வைக்கவும். அதன் மேலும் எண்ணெய் தடவவும். இதில் தயாரித்துவைத்துள்ள கேக் கலவையை ஊற்றி அதன்மீது ஒரு டேபிள்ஸ்பூன் உலர்ந்த க்ரான்பெர்ரியைத் தூவவும்.

பின்னர் இதை ஓவனில் 30 முதல் 35 நிமிடங்கள் வைத்து நன்றாக பேக் செய்து எடுக்கவும்.

**[நேற்றைய ரெசிப்பி: ப்ளூ பெர்ரி மஃப்பின்](https://minnambalam.com/public/2021/12/15/1/blue-berry-mufin)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share