கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – பழங்கள் சாப்பிட உகந்த நேரம் எது?

Published On:

| By Balaji

பழங்கள் சாப்பிட உகந்த நேரம் காலையா, மாலையா, எப்போது சாப்பிடுவது நல்லது… இப்படிப்பட்ட சந்தேகங்களுக்கான தீர்வு இதோ…

**உணவுக்கு முன் இனிப்பு (பழங்கள்)**

ஒருகாலத்தில் ‘இனிப்பு’ என்ற பிரிவுக்குள் பழங்களும் அடக்கம். தேன், பனைவெல்லத்தைத் தாண்டி, பழங்களில் இருக்கும் பழச் சர்க்கரையையும் இனிப்பாகவே ஏற்றுக்கொண்டனர் நமது முந்தைய தலைமுறையினர்.

ஆனால் இன்றோ இனிப்பு என்றால், கலர் கலராக காட்சி தரும் செயற்கைக் கலவைகள் சேர்க்கப்பட்ட பண்டங்கள்தாம் என்று மூளையின் மேற்பரப்பில் அச்சிடப்பட்டுவிட்டது. பழங்கள் என்னும் இனிப்பை, உணவுக்கு முன்பு எடுத்துக்கொள்ளலாமா? இல்லை உணவுக்குப் பின்பா என்ற சந்தேகம், பலருக்கும் ஏற்படத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான விஷயமே.

பொதுவாக இனிப்புச் சுவையை உணவுக்கு முன்பாக அமைத்துக்கொள்வதே நமது மரபு. அந்தவகையில் பழங்களை உணவுக்கு முன்பு சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். உணவின் தொடக்கத்தில் எச்சில் சுரப்பை வரவழைத்து செரிமானத்தைத் தூண்டும் ‘இனிப்புக் கருவி’ பழங்களாக இருக்கட்டும்.

தலைவாழை இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்புத் துண்டுக்குப் பதிலாக, ஒரு பலாச்சுளையோ, நான்கைந்து திராட்சையோ, சிறிது மாதுளை முத்துகளோ இடம்பெறட்டும். அதிலிருக்கும் இனிப்புச் சுவையை உணர்ந்துவிட்டு, உணவை அனுபவியுங்கள்.

இடை உணவாக ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளுக்கு மாற்றாக பழங்களைச் சுவைக்கலாம். உணவைச் சாப்பிட்டதும் பழங்களைச் சாப்பிடும்முறை செரிமானத்தில் பாதிப்பை உண்டாக்கும். மேலும் பழங்களின் மூலம் கிடைக்கவேண்டிய ஊட்டங்களும் பலன்களும் முழுமையாகக் கிடைக்காது.

பொதுவாக விரைவில் செரிமானமாகிவிடும் பழங்கள், மற்ற உணவுகளோடு சேர்ந்து செரிமானத்துக்கு ஆட்படும்போது, செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கின்றன. மேலும், உணவின் மூலம் கிடைத்த சர்க்கரையுடன் பழத்தின் மூலம் கிடைக்கும் சர்க்கரையும் கூட்டு சேர்ந்து, ரத்தச் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கும்.

ஒரு தட்டு நிறைய பழத்துண்டுகளை மட்டும் எடுத்துக்கொள்வதாக இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து சுவைக்கலாம். இடை உணவாக, காலை 11 மணி… மாலை 4-5 மணி அளவில் ருசிக்கலாம்.

**காலையில் பழங்கள்**

‘இரவு சாப்பிட்டதும் சில வாழைப் பழங்களை வாயில போட்டாதான், அடுத்த நாள் மலச்சிக்கல் இருக்காது’ என்று சொல்பவர்கள் பலர். ஆனால் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து பழம் சாப்பிடுவதுதான் முறை. மூன்று வேளை உணவுகளின் செரிமானத்துக்கு இடையூறு செய்யாமல், பழங்களை மென்று சாப்பிட்டாலே, அதிலுள்ள நார்ச்சத்து மலத்தை எளிமையாக்கும். ஒரு வேளை உணவைப் பழங்களாகவே எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தால், உங்கள் தேர்வு காலை வேளையாக இருக்கட்டும்.

**எப்படிச் சாப்பிடலாம்?**

பலாப் பழம் சாப்பிட்டால் உண்டாகும் மந்த உணர்வைத் தடுக்க, அதனுடன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொய்யாப் பழம் சாப்பிடும்போது, தொண்டை கரகரப்பது போலத் தோன்றினால், இருக்கவே இருக்கிறது மிளகு. வெள்ளரிப் பழம் மற்றும் விளாம்பழத் தசையுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால், சுவை அதிகரிக்கும்; வயிற்று உபாதைகள் மறையும். கொட்டையுள்ள மாதுளையும் திராட்சையுமே முழுப் பலன்களைக் கொடுக்கும். ஹைபிரிட் ரகங்கள் சுவை கொடுக்குமே தவிர, சத்துகளைக் கொடுக்காது. ஆரஞ்சு ரகப் பழங்களை அதிலிருக்கும் நார்ச்சத்துடன் முழுமையாகச் சாப்பிட வேண்டும்.

**பழச்சாறு எப்போது, முழுப் பழங்கள் எப்போது?**

‘ஒரு மனிதனுக்குத் தேவையான சர்க்கரையின் அளவைப் பழங்களிலிருந்தே எடுத்துக்கொள்ளலாம்’ என்கிறது ஓர் உணவு நூல். சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட பானங்களையும் அளவுக்கு மீறிய சர்க்கரை சேர்க்கப்பட்ட பன்னாட்டுக் குளிர்பானங்களையும் முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, உடனடி ஆற்றல் கொடுக்கும் சர்க்கரைச் சுரங்கங்களான பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

வெயில் காலங்களில் மட்டும், நீரிழப்பை ஈடுகட்ட பழச்சாறுகளைப் பருகலாம். பழச்சாறுகளில் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். மற்ற காலங்களில் பழங்களை ருசித்து மென்று சாப்பிட்டால்தான், அவற்றில் பொதிந்து கிடக்கும் நார்ச்சத்தும் ஊட்டங்களும் நம்மிடம் முழுமையாகத் தஞ்சமடையும்.

பழங்களைச் சாப்பிடுவதால் உள்ளுறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். மூளையின் செயல்திறன் கூடும். தேகத்தின் மினுமினுப்பைக் கூட்டும். ஆனால், அதன் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். ‘அற்றால் அளவறிந்து உண்க…’ என்ற குறள் கூறும் தத்துவத்தின்படி பழங்களையும் தேவையான அளவு பயன்படுத்துவதுதான் நல்லது.

பருவ காலத்தில் இயற்கையாக விளையும் பழங்களைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால், வாழ்க்கைப் பருவமும் அதிகரிக்கும். பழங்களை வெட்டியவுடன் சாப்பிடுவது நல்லது. அவற்றை வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சில நாள்கள் கழித்து சாப்பிடுவது முறையல்ல.

நீரிழிவாளர்கள் பழங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது, நமது சமூகத்தில் நிலவும் தவறான நம்பிக்கை. தினமும் சில துண்டுகள் கொய்யா, ஆப்பிள், கொஞ்சம் மாதுளை ஆகியவை அவர்களுக்குத் தேவையான ஊட்டங்களைக் கொடுக்கும். நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்காகவே இயற்கையால் படைக்கப்பட்ட பிரத்யேகப் பழமாகும்.

பழங்களைச் சாப்பிடலாம் என்பதற்காக ஒரே நேரத்தில் வயிறு நிறைய மா, பலா, வாழை என்ற முக்கனிக் கூட்டணியைச் சுவைத்தால் சர்க்கரைகூடத்தான் செய்யும். பழங்களைப் பொறுத்தவரை கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

**[நேற்றைய ரெசிப்பி: சைனீஸ் பேல்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/08/14/1/chinese-bale)**

,�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share