kபன்னீருக்கு ‘தங்கத் தமிழ் மகன்’ விருது!

Published On:

| By Balaji

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் ‘தங்கத் தமிழ் மகன்’ விருது வழங்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து தற்போது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 10 நாட்கள் அரசு முறை பயணமாகச் சென்றுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

துணை முதல்வருடன் அவரது மனைவி, மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி, நிதித் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றுள்ளனர். சிகாகோ விமான நிலையத்துக்குக் கடந்த 8ஆம் தேதி அதிகாலை சென்றடைந்த துணை முதல்வருக்குத் தமிழ் சங்கத்தினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (நவம்பர் 10) சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘தங்கத் தமிழ் மகன்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற ஓ.பன்னீர் செல்வம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அமெரிக்க நாட்டின் சிகாகோ மாநகரில், சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், தங்கத் தமிழ் மகன்” விருது பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சிகாகோ உலக தமிழ்ச் சங்கத்திற்கு எனது அன்பு கலந்த நன்றி!” எனத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 10ஆவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு பாராட்டு விழாவில் கலந்துகொண்டார் துணை முதல்வர் பன்னீர் செல்வம். இதுகுறித்து பன்னீர் செல்வம் கூறுகையில், “சிகாகோ தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற 10ஆவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு பாராட்டு விழாவில், திரு.ராஜா கிருஷ்ணமூர்த்தி (US Congressman), Oak Brook Mayor திரு.Gopal Lalmalani மற்றும் Schaumburg Mayor திரு.Tom Dailly ஆகியோருடன் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதே போன்று, American Multi Ethnic Coalition Inc என்ற அமைப்பின் சார்பாக இவ்வாண்டு ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் – ஆசியா’ விருதும் ஓபிஎஸ்ஸுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தின்போது, தமிழகத்தின் புதிய திட்டங்களுக்குத் தேவையான நிதி குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவு உயர் அதிகாரிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share