ஆசிரியர் பயிற்சி கட்டடம் திறக்கப்படுவது எப்போது?

Published On:

| By admin

நீலகிரி மாவட்டம், கூடலூரில் மூன்றே கால் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு மூடி கிடக்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் திறக்கப்படுவது எப்போது என்று கூடலூர் பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தோட்டத்தொழிலாளர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இது தவிர ஆதிவாசி மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலும் பள்ளிப்படிப்பை முடித்து விடுகின்றனர். பின்னர் மேல்படிப்புக்காக ஊட்டி அல்லது கோவைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதை கருத்தில்கொண்டு கூடலூரில் அரசு கல்லூரி திறக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் பயிற்சி படிப்புக்காக கோத்தகிரிக்கு செல்லும் நிலை இருந்தது.
இதைத் தவிர்க்க கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளிகல்வித் துறை சார்பில் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டு மூன்றே கால் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி வருகிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனம் திறக்கப்படுவது எப்போது என்று பொதுமக்கள், மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியன் தமிழக அரசுக்கு அனுப்பிய மனுவில், “ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ப்ளஸ்-2 முடித்தவர்கள் சேர்ந்து ஆசிரியர் பட்டயப் படிப்பைப் படிக்க முடியும். இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்தவர்கள் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும்.
இந்த நிறுவன கட்டுமான பணி நடந்த சமயத்தில் பிற மாவட்டங்களில் புதிதாக தொடங்கிய ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. ஆனால் கூடலூரில் கட்டடம் கட்டப்பட்டு வீணாகி வருகிறது. எனவே மாணவர்கள் நலன் கருதி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை திறக்க வேண்டும்” என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.

**- ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share