oஊட்டி மலை ரயில்: குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On:

| By admin

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டம் நீலகிரியில் அவ்வப்போது சாரல் மழை, மேகமூட்டம் என இதமான குளு, குளு கோடை சீசன் துவங்கியுள்ளது. இந்த இதமான சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாகவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளில் 80 சதவீத சுற்றுலா பயணிகள் நூற்றாண்டை கடந்த புகழ்பெற்ற ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை அடர்ந்த காடுகள் வழியே செல்லும் நீராவி என்ஜின் மலை ரயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ரயிலில் பயணிக்கும் போது வனவிலங்குகள், இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம் என்பதால் மலை ரயிலில் பயணிக்க அதிகம் விரும்புகிறார்கள். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் மலை ரயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

எதிர்வரும் மே மாதம் சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கோடை சீசன் முடியும் வரை சிறப்பு மலை ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரவு நேரங்களில் ஊட்டி முதல் கேத்தி வரை சுற்றுலா பயணிகளுக்காக தனி நீராவி இன்ஜின் கொண்ட மலை ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share