சர்வதேச சுற்றுலா மையமான நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு போட்டிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை சீசன் குதிரை பந்தயத்தோடுதான் தொடங்குவது வழக்கம்.
அதன்படி மெட்ராஸ் கிளப் சார்பில் இந்த ஆண்டுக்கான 135ஆவது குதிரை பந்தயம் தமிழ் புத்தாண்டான நாளை தொடங்கி வருகிற ஜூன் மாதம் வரை 2 மாதங்கள் ஊட்டி ரேஸ் கோர்சில் நடக்கிறது. இதற்காக பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புனே உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை குதிரை பந்தய சங்கத்தின் செயலாளர் நிர்மல் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த ஆண்டுக்கான குதிரை பந்தயம் தமிழ் புத்தாண்டான நாளை தொடங்கி ஜூன் மாதம் 18-ந் தேதி வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குதிரை பந்தயத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 குதிரைகள் ஊட்டிக்கு வந்துள்ளன. ஒரு பெண் பயிற்சியாளர் உள்பட 30 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.” என்று தெரிவித்தார்.
சென்னை மட்டுமின்றி மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 ஜாக்கிகள் கலந்து கொள்கின்றனர். அனைத்துப் பந்தயங்களும் காலை நேரத்தில் மட்டுமே நடைபெறும். மொத்தம் ரூ.5 கோடியே 35 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதுதவிர மொத்தம் 18 போட்டிகள் நடக்கிறது.
இம்முறை இப்போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தினமும் மும்பை, புனே, ஐதராபாத், மைசூர், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் நடக்கும் அனைத்து குதிரை பந்தயங்களின் நேரடி ஒளிபரப்பு ஊட்டி ரேஸ் கோர்சில் காண்பிக்கப்படும்.
.