ஊரடங்கு உத்தரவால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், சென்னையை சேர்ந்த அனுராதா முரளி என்பவர் தன்னுடைய 8 வயது மகளை ஆன்லைன் வகுப்புகளில் சேர்த்துள்ளார். ஆரம்பத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆன்லைன் வகுப்புகளை கவனித்துக் கொண்டிருந்த அவருடைய மகள் போகப்போக வகுப்புகளை பிடிக்காமல் எரிச்சலுடன் கவனிக்க துவங்கினார். அதற்குப்பிறகு வகுப்புகளுக்கு நேரம் ஆகிவிட்டது எனக்கூறினாலே கோபப்படுவது என நடந்து கொள்ள துவங்கினார் எட்டு வயது மீனு.
இதுகுறித்து அனுராதா, “வகுப்புக்கு நேரமாகி விட்டது என்று தனது மகளிடம் கூறும் போதெல்லாம் அவள் அதிகமாக கோபப்பட்டதாகவும், எந்த ஒரு காரணமும் இல்லாமல் அடிக்கடி அடம் பிடிக்க துவங்கியதாகவும் தெரிவிக்கிறார். அனுராதா மனநல மருத்துவரான தனது நண்பரிடம் இதுகுறித்து பேசிய போதுதான் ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ கால்கள் குழந்தையின் வாழ்க்கையை எப்படி மாற்றிவிட்டது என்பதை அவருக்கு உணர்த்தியுள்ளது.
ஜூம் பேட்டிக் (Zoom Fatigue) என்ற வார்த்தை ஊரடங்கால் வீடியோ கால்கள் மூலம் பேசிக்கொள்வதால் ஏற்படும் ஒரு வித தளர்ந்த மனநிலையை குறிக்கிறது. இந்த வீடியோ கால்கள் மூலமான ஜூம் பேட்டிக் பெரியவர்களைப் போல் அல்லாமல் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது. பெரியவர்களைப் போல் குழந்தைகளால் அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்விக்காக, பொழுதுபோக்கிற்காக அல்லது உறவினர்களுடன் வீடியோ கால்கள் மூலமாக பேசும்போது குழந்தைகளை, குறிப்பாக சிறிய குழந்தைகளை இந்த புதிய மாற்றம் உணர்வுபூர்வமாக பாதிக்கிறது.
”சில பள்ளிக்கூடங்களில் வீடியோ மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. குழந்தைகள் அதன் மூலமாக வகுப்புகளை கவனித்து வருவதாக என்னிடம் தெரிவித்தனர். பள்ளியில் அமர்ந்து கவனிக்கும் முறையை அவர்கள் தற்போது மிகவும் இழந்துள்ளதாக குழந்தைகள் தெரிவித்தனர்” என மனநல மருத்துவர் டாக்டர் சிவபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வீடு என்பது விளையாடுவதற்கும், விடுமுறையைக் கழிப்பதற்கான ஒரு மகிழ்ச்சியான இடமாக இருந்தது. பள்ளி என்பது கல்வி கற்பதற்கான இடமாக இருந்தது.
வீடு எனும் போது ஏசி அறையில் அமர்ந்துகொண்டு கார்ட்டூன் நெட்வொர்க் பார்ப்பது அவர்கள் மனதில் பதிந்து இருக்கும் நிலையில் திடீரென வீட்டில் ஒரு டீச்சர், கேமரா மூலம் படியுங்கள் என்று சொல்லும்போது, அவர்கள் மனதில் பதிந்து இருந்ததற்கும் தற்போது நடக்கும் நிகழ்வுகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு குழந்தைகள் அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். கொஞ்சம் பெரிய சிறுவர்களாக இருக்கும் பட்சத்தில் தேர்வுகள் நடக்குமா நடக்காதா? அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாமல் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
”சமூக விலகல் அனைவரையும் விட குழந்தைகளுக்கே மிகவும் முக்கியமானது. தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது, உறவினர்கள் நண்பர்களை சந்திக்காமல் இருப்பது அல்லது வீடியோ கால்கள் மூலம் சந்திப்பது அவர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று மன நல மருத்துவர் மினி ராவ் தெரிவிக்கிறார். மேலும் குழந்தைகளை அதிக அளவு ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுப்பி அழுத்தத்துக்கு ஆளாக கூடாது என்றும் அவர் அறிவுரை வழங்குகிறார்.
இது பலவிதமான மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். எதிர்மறையான இந்த மாற்றத்தால் உருவாகும் திடீர் கட்டுப்பாடுகளால் குழந்தை சாதாரண வாழ்க்கையில் இருந்து அதாவது பள்ளிக்கூடத்திற்கு போவது, திரும்பி வருவது, விளையாடுவது, நண்பர்களைப் பார்ப்பது இவற்றில் இருந்து திடீரென மாற்றப்படும்போது அவர்களுக்கு எரிச்சல், கோபம், உதவியின்மை போன்ற எதிர்மறையான எண்ணங்கள் உருவாகும். என்று அவர் கூறுகிறார்.
”குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் இணைந்து பலவிதங்களில் உதவ முடியும்.ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் போதும் ஒரு ஐந்து நிமிட இடைவெளி கொடுத்து மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் ஒருவருடன் ஒருவர் உரையாட ஆசிரியர்கள் வாய்ப்பு வழங்க வேண்டும். கிட்டத்தட்ட பள்ளி மாதிரியான ஒரு செயற்கையான அமைப்பை ஏற்படுத்த ஆசிரியர்களால் முடியும்” என்று கூறுகிறார் மருத்துவர் சிவபிரகாஷ். இதன் மூலம் இந்த மாதிரியான மாற்றத்திற்கு குழந்தைகள் சீக்கிரமே பழகிக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கிறார்.
வழக்கமான ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு ஒரு நிலைத்தன்மையும் பாதுகாப்பு உணர்வையும் பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் உடற்பயிற்சி செய்ய பெற்றோர்கள் ஊக்கமளிக்க வேண்டும். அதே நேரத்தில் பாடல், ஆடல், கணிதம், அறிவியல் என பல ஆன்லைன் வகுப்புகளில் அவர்களை சேர்த்து விட்டு அவர்களை அழுத்தம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் மருத்துவர் தெரிவிக்கிறார்.
இறுதியாக புதிய மாற்றத்திற்கு மாறும் வரை அவர்களுக்கு நேரம் கொடுங்கள். அவர்களுக்கு வேண்டாத எந்த ஒரு விஷயத்தையும் செய்ய சொல்லி வற்புறுத்த வேண்டாம். குழந்தை பருவத்தில் அவர்கள் அவசரப்பட்டு செய்வதற்கு எந்தத் தேவையுமில்லை. அவர்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் வாழ விடுங்கள்.
**பவித்ரா குமரேசன்**
நன்றி – டைம்ஸ் ஆப் இந்தியா�,