நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இன்று முதல் ரேஷன் கடைகளிலும் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் மழை காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்தது. இதனால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வைக் குறைக்க இரு தினங்களுக்கு முன்பு தமிழக அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். நாசிக் மற்றும் ஆந்திராவிலிருந்து வெங்காயம் கோயம்பேட்டிற்கு வரவுள்ளதால் அதன் விலை ஓரிரு நாட்களில் குறையும் என்று தமிழக அரசு அறிவித்தது.
மத்திய அரசிடம் போதிய வெங்காயம் இருப்பு உள்ளதால், அவை விரைவில் சந்தைக்குக் கொண்டுவரப்படும் என்று கூறிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இதனால் ஓரிரு நாட்களில் விலை குறையும் என்று நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 25) தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “தமிழகத்தில் கூட்டுறவு அங்காடிகளில் ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட வெங்காயம் ரூ.33க்கு விற்பனை செய்யப்படும், அதுபோன்று மகாராஷ்டிராவிலிருந்து கொண்டு வரப்படும் வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்யப்படும். மகாராஷ்டிராவிலிருந்து வாங்கக் கூடிய வெங்காயம் 10 நாட்கள் வரை தாங்கக் கூடியது என்று தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளிலும் இன்று முதல் குறைந்த விலைக்கு வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் சென்னையில் 200 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மத்தியத் தொகுப்பில் 36,000 மெட்ரிக் டன் வெங்காயம் இருப்பு உள்ளது. இதனை வாங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை குறையும் என்று தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக ஆட்சிக் காலத்தில் 2010ல் செப்டம்பரில் வெங்காயம் கிலோ ரூ.102க்கு விற்றது. அக்டோபரில் ரூ.129, நவம்பரில் ரூ.140, டிசம்பரில் ரூ.140க்கு விற்கப்பட்டது. அப்போது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், வெங்காயம் விலை ரூ. 60ஐ எட்டும்போதே அதன் விலையைக் குறைக்க அதிமுக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. வெங்காயத்தைக் கள்ளச் சந்தையில் பதுக்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.�,”