பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பியதால் காரணமாக சின்ன வெங்காயம் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை இரட்டிப்பாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடி மற்றும் ஐப்பசி பருவங்களில் அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் திருச்சி, சென்னை, ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், கடந்த நான்கு மாதங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பட்டம், கார்த்திகைப் பட்டம், வைகாசி பட்டம் என மூன்று காலங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் 40 நாட்கள் கடந்த மற்றும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சின்ன வெங்காயத்தில் வேர் அழுகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள வெங்காய தாள்களில் பழுப்பு நிறம் காணப்படும். இதனால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம் ஆகிய பகுதிகளில் வெங்காய பட்டறைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. உற்பத்தி இல்லாததால் சின்ன வெங்காயத்தின் விலை இரட்டிப்பாக உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஆண்டு முழுவதும் வெங்காயத்தை மட்டுமே சாகுபடி செய்த இந்த விவசாயிகள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நெல் பயிரிட்டுள்ளனர்.
**-ராஜ்**
.�,