கடந்த சில வாரங்களாக பெரிய வெங்காயத்தின் விலை ஏற்றமாகவே இருந்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.50, ரூ.60, ரூ.70, ரூ.80… எனத் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது. சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.120 வரை விற்பனையாகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் வெங்காய வியாபாரிகள்.
பெரிய (பெல்லாரி) வெங்காய உற்பத்தியில் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காயச் சந்தையில் இருந்துதான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது.
அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் மராட்டியத்தில் பருவம் தவறி மழை பெய்தது. அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த நேரத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. ஆனால், வடகிழக்குப் பருவமழை காலத்தில் அரபிக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னத்தால் மராட்டியத்தில் மழை கொட்டித் தீர்த்தது.
பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்தன. இந்த நிலையில் வெங்காயம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
“கடந்த மாதத்தில் மராட்டியத்தில் மீண்டும் பருவம் தவறி பெய்த மழையால் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. நாசிக் சந்தையில் பெரிய வெங்காயம் தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 முதல் 4,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறுகிறார்கள்.
சின்ன வெங்காயத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெருமளவு பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது.
வழக்கமாக வைகாசி, புரட்டாசி, தை பட்டங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படும். சமீபகாலமாகக் கார்த்திகைப் பட்டத்திலும் பயிரிடப்படுவதால் ஆண்டு முழுவதும் சந்தைக்கு வெங்காய வரத்து உள்ளது. இத்தகைய சூழலில் புரட்டாசி, கார்த்திகை பட்டங்களில் பெரம்பலூர், துறையூர் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் பூச்சி, நோய்த் தாக்குதல் காரணமாக உற்பத்தி குறைந்து காணப்படுகிறது.
தொடர்ச்சியான மழை மற்றும் ஏதுவான காலநிலை காரணமாக வெங்காயம் பயிரிடப்படும் பகுதிகளில் சுமார் 9,000 ஹெக்டேர் பரப்பில் இந்தத் தாக்கங்கள் காணப்படுவதாக அங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்தப் புதிய விலை உயர்வு வரும் அறுவடைக் காலமாகிய மார்ச் 21 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
**-ராஜ்**�,