வரத்துக் குறைவால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் மழையின் காரணமாகச் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை சமீபகாலமாகக் கடுமையாக உயர்ந்து வருகிறது.
தற்போது கோயம்பேட்டில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறைக் கடைகளில் ரூ.200 வரை விற்பனையாகிறது. பெரிய வெங்காயத்தின் விலை கோயம்பேட்டில் ரூ.130 வரை விற்பனையாகிறது. மேலும் விலை உயர வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வெங்காய விலை உயர்வு குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது. வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், விலை உயர்வு குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு வெங்காயத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது. வழக்கமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெங்காய விலை உயரும். ஜனவரியில் குறைந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.
வெங்காயத்தைத் தவிர மற்ற காய்கறிகளைப் பொருத்தவரையில், கத்தரிக்காய் கிலோ 30 ரூபாய்க்கும் தக்காளி கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது�,