மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சின்ன வெங்காய சாகுபடி அதிகம் இருப்பதால் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு நேற்று (மே 21) சுமார் 16 டன் சின்ன வெங்காயம் வந்தது. ஆனால், தற்போது சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருப்பூர் பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த ஆண்டு திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சின்ன வெங்காயம் குறைந்த அளவில் பயிரிடப்பட்டு இருந்ததால் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு குறைந்த அளவிலேயே வெங்காயத்தின் வரத்து இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்து வருகிறது. கொடுவாய், பொங்கலூர், அவினாசிபாளையம், வாவிபாளையம், ஜல்லிப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வெங்காயம் அதிக அளவில் வருகிறது.
நேற்று (மே 21) மொத்த விற்பனை மார்க்கெட்டுக்கு சுமார் 16 டன் சின்ன வெங்காயம் வந்தது. இவ்வாறு வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சின்ன வெங்காயத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது. மொத்த விற்பனை விலையாக 25 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காய மூட்டை கடந்த ஆண்டு ரூ.1,000 முதல் ரூ.1,200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று 25 கிலோ மூட்டை வெங்காயத்தின் தரத்துக்கேற்றவாறு ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.400 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயத்துக்கு ஓரளவு விலை கிடைத்த நிலையில் தற்போது நீண்ட காலமாக வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வெங்காயத்தின் விலை அதிகரித்தால் மட்டுமே விவசாயிகள், வியாபாரிகளின் சிரமம் தவிர்க்கப்படும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

**-ராஜ்-**

.

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts