ஏற்றுமதி இல்லாததால் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி!

public

திண்டுக்கல் மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை நீடிப்பதால் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.15-க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கோவை, மதுரை, திருச்சி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய மார்க்கெட்டுகள் உள்ளன. இதில் திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டைப் பொறுத்தவரை வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வரத்து குறைவால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 வரை விற்பனை ஆனது. இதற்கிடையே குஜிலியம்பாறை, எரியோடு, கோவிலூர், செங்குறிச்சி, ரெட்டியார்சத்திரம், இடையக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு இருந்தது. அவை விளைச்சல் அடைந்ததால், விவசாயிகள் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வரத்தொடங்கினர்.
இதையடுத்து கடந்த மாதத்தின் தொடக்கத்தில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.60 ஆக குறைந்தது. அதேநேரம் மாவட்டம் முழுவதும் சின்ன வெங்காயத்தின் அறுவடை தீவிரம் அடைந்தது. மேலும் வெளிநாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதனால் விலை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது.
இதற்கிடையே நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூரு, தாளவாடி உள்ளிட்ட இதர பகுதிகளில் இருந்தும் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வந்தன. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 5,000 வெங்காய மூட்டைகள் குவிந்தன. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது.
இதன் விளைவாக நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.15-க்கு விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால்தான் விலை உயரும் என்பதால் அதை எதிர்நோக்கி விவசாயிகளும், வியாபாரிகளும் காத்திருக்கின்றனர்.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.