உச்ச நீதிமன்ற அவதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞரும் பொது நல வழக்குகளுக்கு பெயர் பெற்ற சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து இன்று (ஆகஸ்டு 31) தண்டனை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து ஜூன் 29 ஆம் தேதி பிரசாந்த் பூஷண் பதிவிட்ட இரு ட்விட்டர் பதிவுகளின் அடிப்படையில் அவர் மீது உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 14 ம் தேதி பிரசாந்த் பூஷணை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரத்தை ஆகஸ்டு 20 ஆம் தேதி அறிவிப்பதாகத் தெரிவித்தது.
அதன்படி ஆகஸ்டு 20 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜரானார் பூஷண். நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணை துவங்கியதும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை எதுவும் வழங்க வேண்டாம்’ என்று கோரிக்கை விடுத்தார். “நீங்கள் விரும்பினால், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர நாங்கள் அவகாசம் அளித்துள்ளோம். அதை ஆகஸ்டு 24 ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேண்டும். மன்னிப்பு சமர்ப்பிக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டிய வழக்கு, 25 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்” என்றனர் நீதிபதிகள்.
ஆனால் பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எனக்கு தண்டனை அளிக்கப்படுவதால் நான் வேதனை அடையவில்லை. நான் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதில்தான் வேதனையடைந்துள்ளேன். எனது சமூகக் கடமைகளையே ட்விட்டரில் நான் பதிவு செய்திருக்கிறேன். நான் கருணை கேட்கவில்லை. நீதிமன்றம் விதிக்கக்கூடிய எந்தவொரு தண்டனையையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன் “என்று கூறினார்.
ஆனாலும் நீதிபதிகள் 25 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். அன்றைய விசாரணையிலும் அட்டர்னி ஜெனரல் கே. கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில், “பிரசாந்த் பூஷணின் கருத்துகள் நீதிமன்ற சீர்திருத்தத்துக்காக சொல்வதாக மட்டுமே இருக்கின்றன. எனவே அவருக்கு முதலில் ஒரு எச்சரிக்கை கொடுத்து விட்டுவிடலாம். அவர் தண்டிக்கப்பட வேண்டியதில்லை” என்று கூறினார். அன்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிற்பகல் 1.30 மணிக்கு, “பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றம் பற்றிய தனது புகார்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றால் மட்டுமே இந்த வழக்கை முடித்து வைக்க முடியும். உச்ச நீதிமன்றத்தின் மீதான புகார்களைத் திரும்பப் பெறுவதற்கு பூஷணுக்கு அரைமணி நேரம் அவகாசம் அளிக்கிறோம்” என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.
பிற்பகல் இரண்டு மணிக்குப் பின் விசாரணை மீண்டும் தொடங்கியபோது பிரசாந்த் பூஷணின் வழக்கறிஞர் தவான், “நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளில் இருந்து வெளியேறுவதற்கு மன்னிப்பு கேட்பது என்பது ஊன்றுகோலாக இருக்க முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் மன்னிப்பு கேட்குமாறு யாரையும் வற்புறுத்த முடியாது. உச்ச நீதிமன்றம் விமர்சனங்களைத் தாங்குகின்ற திடமான தோள்களைப் பெற்றிருக்க வேண்டும். பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை அளித்தால் அவரை ஒரு சாரார் நீதித்துறையின் மாவீரராக போற்றுவார்கள். இன்னொரு சாரார் இது சரியான தண்டனை என்று கொண்டாடுவார்கள். பிரசாந்த் பூஷணை மாவீரர் ஆக்குவதும் ஆக்காததும் உச்ச நீதிமன்றத்திடம்தான் இருக்கிறது” என்று பதிலளித்தார். உச்ச நீதிமன்றம் இரண்டாம் முறை அளித்த அரைமணி நேர அவகாசத்துக்குப் பின்னரும் பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் அவருக்கு என்ன தண்டனை என்பதற்கான தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் இன்று காலை 11.23 க்கு மணிக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தனர். நாளைய தினம் ஓய்வு பெற இருக்கும் நீதிபதி அருண் மிஸ்ரா இவ்வழக்கின் தீர்ப்பை 11. 44க்கு வாசிக்க ஆரம்பித்தார்.
“உச்ச நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அவர் செலுத்த மறுத்தால் 3 மாத சிறை தண்டனை, 3 வருட வழக்கறிஞர் தொழில் செய்ய தடை ஆகியவை விதிக்கப்படும்” என்று தண்டனை அறிவித்தார் நீதிபதி.
**-ஆரா**�,”