அமெரிக்காவில் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் ஃபிளாயிட் மரணத்துக்கு நீதி கேட்டு மூன்றாவது வாரமாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞர் காவல்துறையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அட்லாண்டா காவல்துறை தலைமை அதிகாரி எரிக்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அட்லாண்டாவின் மேயர் கீஷா லன்ஸ் பாட்டம்ஸ், எரிக்காவின் ராஜினாமாவை அறிவித்ததோடு 27 வயதான ரேய்ஷார்ட் ப்ரூக்ஸ் என்பவரை கொலை செய்த காவல்துறை அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து நீக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் , ”கொடூர ஆயுதத்தை இதில் முறையாக பயன்படுத்தியதாக நினைக்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.
மேயரின் அறிவிப்பு இளைஞரின் மரணம் தொடர்பாக போராடிய போராட்டக்காரர்களை சற்றும் அமைதிப்படுத்தவில்லை. ப்ரூக்ஸ் கொலை செய்யப்பட்ட இடத்தில் வந்து அவருடைய பெயரைக் கூறி போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர்.
ப்ரூக்ஸை கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது அவர் காவல்துறையினரிடம் இருந்து டேசர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஓடியதாகவும், இதையடுத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்லாண்டாவில் உணவு விடுதி ஒன்றில் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் ப்ரூக்ஸ் தனது காரிலேயே தூங்கியுள்ளார். இதையடுத்து வாடிக்கையாளர்கள் வருகையை அவர் தடுக்கிறார் என்று அவர் மீது காவல் துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. காவல்துறையினர் அவரை சோதனை செய்ய முயன்றபோது அவர் மது அருந்தியுள்ளார் என தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய முயற்சித்தபோது போலீசாரிடம் இருந்த துப்பாக்கி ஒன்றை பிடுங்கி அந்த இடத்திலிருந்து ஓடியிருக்கிறார் ப்ரூக்ஸ். அவரிடம் இருந்து துப்பாக்கியை பெறுவதற்கும் அவரை கைது செய்வதற்கும் காவல்துறையினர் முயன்றபோது அவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியை காட்டியதாகவும் இதனால் அவரை காவல்துறையினர் சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறகு ஆம்புலன்சில் அவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. அறுவை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் ப்ரூக்ஸ்.
ப்ரூக்ஸ் காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடுவது மற்றும் காவல்துறையினர் அவரை சுடுவது அனைத்தும் அந்த உணவகத்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
சம்பவம் நடைபெற்ற அந்த உணவு விடுதி போராட்டகாரர்களால் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ப்ரூக்ஸ் நான்கு குழந்தைகளின் தந்தை என்றும் தெரியவந்துள்ளது. அவரது மரணத்தை தொடர்ந்து அமெரிக்காவில் போராட்டம் இன்னும் தீவிரமடந்துள்ளது.
** – பவித்ரா குமரேசன்**�,